உலகம்

வியட்நாம்: கொரோனாவை பரப்பியதாக ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

Veeramani

கொரோனா விதிகளை மீறியதற்காகவும், கொரோனா வைரஸை பரப்பியதற்காகவும் வியட்நாமை சேர்ந்த ஒருவருக்கு  ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் ஜூன் மாதம் முதல் நாட்டில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வியட்நாமில் இதுவரை 5,30,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,330 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாமில் அதிகளவிலான கொரோனா பாதிப்பு ஹோ சி மின் நகரில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் ஜூலை மாத தொடக்கத்தில், லீ வான் ட்ரி எனும் 28 வயது இளைஞன் ஹோ சி மின் நகரத்திலிருந்து நாட்டின் தெற்கில் உள்ள தனது சொந்த மாகாணமான கா மவ்வுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

பிற மாகாணங்களிலிருந்து கா மவ்வுக்குள் வரும் எவரும் உடனடியாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் லீ வான் ட்ரி, கா மாவில் சுகாதார பணியாளர்களிடம் ஹோ சி மின்னிலிருந்து வருவதை மறைத்துவிட்டார். கட்டுப்பாடுகளை மீறிய ட்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மேலும் அவர் சோதனை செய்த  சுகாதார மையத்தின் ஊழியர்களுக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

எட்டு பேருக்கு "ஆபத்தான தொற்று நோய்களை பரப்பிய" குற்றத்திற்காக லீ வான் ட்ரி என்ற நபருக்கு, விசாரணையின் முடிவில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் $ 880 (£ 630) க்கு சமமான அபராதமும் விதிக்கப்பட்டது. இவர் நோயை பரப்பியதாக சொல்லப்படும் நபர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.