துபாய்-இஸ்ரேல் விமானத்தில் துணை விமானி தாக்குதல் காரணமாக 14,000 அடி உயரத்தில் விமானம் சரிந்தது. இந்திய விமானி ஸ்மித் மச்சார், பலத்த காயங்களுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, உலக தலைவர்கள் விமானியை பாராட்டினர்.
செய்தியாளர் - கார்த்திகேயன்
துபாய் நகரத்தில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பகுதியை நோக்கி, ஃளைதுபாய் என்ற விமானம் வந்துக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில், 170-க்கும் மேற்பட்ட பயணிகள், பயணம் மேற்கொண்டிருந்தனர். விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்மித் மச்சார் என்ற இந்திய விமானியின் மீது துணை விமானி ஆயுதம் ஒன்றால் கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து, விமானியின் சத்தம் கேட்டு வந்த பயணிகள் சிலர், அந்த துணை விமானியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த களேபரங்களுக்கு இடையே, வானில் பறந்துக் கொண்டிருந்த விமானம், திடீரென 14 ஆயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக சரிந்துள்ளது. துணை விமானியால் பலத்த காயங்களுக்கு ஆளானபோதிலும் ஸ்மித் மச்சார், சவுதி அரேபியாவின் தபூக் நகரில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, தொடர் விசாரணைகள் நடந்து வருகிறது. மேலும், பலத்த காயம் அடைந்தபோதிலும், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை, பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலக தலைவர்கள், வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்தபோது விமானத்திற்குள் என்ன நடந்தது என்ற, பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்ரேலை சேர்ந்த ஊடகம் ஒன்று தான், இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், விமானத்தை கீழே மோதுவதற்கு துணை விமானி முயற்சிக்கிறார் என்று, ஆங்கிலம் மற்றும் ஹீப்ரு மொழிகளில், பயணிகள் சிலர் கத்திக் கூச்சலிடுவது பதிவாகியுள்ளது. மேலும், எல்லோரும் ரிலாக்ஸா இருங்க என்று, பயணிகளில் இருந்த ஒருவர், சக பயணிகளிடம் கூறுவதும், அந்த துணை விமானியை காக்பிட் பகுதியில் இருந்து வெளியே இழுத்து வாருங்கள் என மற்ற பயணிகள் சொல்வதும், வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, மருத்துவர் யாராவது இருக்கிறீர்களா என்று, விமான குழுவினரில் ஒருவர் பயணிகளிடம் கேட்பது, இங்கே கூடுதல் பைலட் ஒருவர் இருக்கிறார் என்று பயணிகளில் ஒருவர் சொல்வது, என்று மிகுந்த பரபரப்புடன் அந்த வீடியோ காட்சி உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, ரத்தக்கறை படிந்த ஆடைகளை அணிந்தபடி சிலர் விமானிகள் அமரும் காக்பிட் பகுதிக்கு உள்ளேயும், வெளியேயும் செல்வது, அந்த வீடியோவில் பதிவாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.