தண்ணீரில் மூழ்கிய சிறுமியை, பாய்ந்து காப்பாற்றிய புட் டெலிவரி பாயை சமூக வலைத்தளங்களில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சீனாவில் நீரில் மூழ்கிய சிறுமியை இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவர்தான் நிஜ ஹீரோ என்று அந்த இளைஞர் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். சீனாவின் சிஜியாங் நகரில் கால்வாயின் அருகே இரண்டு சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுமி தண்ணீரில் இறங்கியுள்ளார். தண்ணீர் படியில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி திடீரென்று வழுக்கி தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தார். இதனைக்கண்ட மற்றொரு சிறுமி செய்வதறியாது அலறியுள்ளார்.
அப்போது அவ்வழியா இரு சக்கர வாகனத்தில் சென்ற டெலிவரி பாய் ஹி லின்ஃபெங் ஒருவர் நீரில் சிறுமி மூழ்குவதைக் கண்டுள்ளார். உடனே தனது செல்போனை தரையில் வைத்துவிட்டு தண்ணீரில் குதித்து மூழ்கும் சிறுமியை காப்பாற்றியுள்ளார். சிறுமியை காப்பாற்றியது மட்டுமல்லாமல் மீண்டும் தண்ணீரில் இறங்கிய அவர், தண்ணீரில் மிதந்து சென்ற சிறுமியின் செருப்பை எடுத்து மேலே கொண்டுவந்தார்.
இது குறித்து பத்திரிகைக்கு பேட்டியளித்த ஹி லின்ஃபெங், “நான் சாலையில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தேன். அப்போது சாலையில் நின்றிருந்த சிறுமி அலறினார். அப்போது தண்ணீரில் ஏதோ சலசலப்பை உணர்ந்தேன். அங்கே நீரில் ஒரு சிறுமி மூழ்குவதை பார்த்தேன். உடனே தண்ணீரில் குதித்து சிறுமியைக் காப்பாற்றினேன். பிறகு வீடு வரை சிறுமி பாதுகாப்பாக சென்றாரா என்பதையும் நான் உறுதி செய்த பின்னே நான் கிளம்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஹி லின்ஃபெங்கின் இந்தச் செயலை அனைவரும் பாராட்டு வருகின்றனர். அவர் வேலை பார்க்கும் நிறுவனர் அவருக்கு மாடல் ட்ரைவர் என்ற விருதும், பரிசுத்தொகையும் கொடுத்து பாராட்டியுள்ளனர்.
வீடியோ : நன்றி CGTN