உலகம்

கால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ

கால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ

webteam

ஆஃப்கானிஸ்தானில் கால் இழந்த சிறுவன் ஒருவன் தனக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டப் பிறகு மகிழ்ச்சியாக நடனமாடிய வீடியா காண்போரை நெகிழ வைத்துள்ளது. 

பொதுவாக கால்களை இழந்துவிட்டால் தனது வாழ்க்கை முடங்கிவிட்டது எனப் பலர் கருதுவது உண்டு. ஆனால் இதற்கு மாறாக ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த சிறுவன் ஒருவன் விபத்தில் கால் இழந்த பின்னர் மனம் தளராமல் இருந்துள்ளான். அத்துடன் செயற்கை கால் பொருத்திய பிறகு தனது ஆனந்தத்தை நடனமாடி வெளிப்படுத்தியுள்ளான்.

ஆஃப்கானிஸ்தானின் லோகர் பகுதியை சேர்ந்த சிறுவன் அகமத். இவன் அப்பகுதியில் ஏற்பட்ட சுரங்க வெடி விபத்தில் தனது வலது காலை இழந்தான். இதனையடுத்து அகமத்திற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் எலும்பியல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவனுக்கு செயற்கை கால் பொருத்தும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் நேற்று அச்சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால் கிடைத்த மகிழ்ச்சியில் அச்சிறுவன் ஆனந்த நடனம் ஆடியது காண்போரை வியக்க வைத்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த மக்கள் அச்சிறுவனின் தன்னம்பிக்கையை பாராட்டியுள்ளனர். அத்துடன் கால்களை இழந்து முடங்கி கிடப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் அவர்களுக்கும் இது நம்பிக்கை தரும் எனப் பதிவிட்டுள்ளனர்.