ஆஸ்திரேலிய நாட்டில் பசியால் பீச் டவலை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிய நிலையில், மருத்துவர்கள் அந்த டவலை போராடி வயிற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.
பொதுவாகவே மலைப்பாம்புகள் ஆடு, முயல் போன்ற விலங்குகளை அப்படியே விழுங்கிவிடும். மெல்ல மெல்ல அதனை செரிமானம் செய்து தனக்கு தேவையான உணவை எடுத்துக் கொள்ளும். சில நேரங்களில் மனிதர்களை கூட மலைப்பாம்புகள் விழுங்கிவிடுவண்டு. ஆனால், சில நேரங்களில் என்ன உணவுப் பொருள் என்றே தெரியாமல், அவற்றை விழுங்கிவிட்டு மலைப்பாம்புகள் கடும் வலியை அனுபவிக்கும். அந்த வகையில்தான் ஆஸ்திரேலியாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிட்னி நகரைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்று தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றில் சிக்கிய பொருளை மருத்துவர்கள் போராடி வெளியே எடுக்கின்றனர். அதாவது, அந்த பாம்பானது பசியால் பீச் டவலை விழுங்கியிருக்கிறது. 18 வயதுடைய அந்த பாம்பு விழுங்கிய 10 அடி நீளமுள்ள அந்த துண்டு, பாம்பின் நடு உடலில் சிக்கிக் கொண்டது.
மருத்துவர்கள் நீண்ட கம்பி போன்ற ஒன்றினை பாம்பின் வயிற்றுக்குள் மெல்ல மெல்ல உள்ளே அனுப்புகிறார்கள். அதற்கு முன்பாக பாம்பின் வயிற்றில் எந்த இடத்தில் டவல் இருக்கிறது என்பது கணித்துக் கொள்கிறார்கள். அதன்படி, ஒரு மருத்துவர் பாம்பின் தலைப்பகுதியில் அழுத்திப்பிடித்துக் கொண்டு அந்த கம்பியை உள்ளே அனுப்புகிறார். மற்றொருவர் பாம்பின் பின் பகுதியில் இருந்து அழுத்துகிறார். ஒரு வழியாக அந்த கம்பியின் மூலம் டவல் வெளியே எடுக்கப்படுகிறது. பார்ப்பதற்கே இந்த வீடியோ பயங்கரமாக இருக்கிறது.
இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவரும் இந்த வீடியோவை பகிர்ந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால் விலங்குகள் பாதிப்படைவதாக குறிப்பிட்டுள்ளார்.