தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. இந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்மண்டோ கோன்சலஸ் உருட்டியா களமிறங்கினார்.
இவர்களுக்கிடையே நேரடி போட்டி நிலவியது. அதாவது, வெனிசுலாவில் 25 வருடங்களாக பொதுவுடமைவாத பிஎஸ்யுவி கட்சி ஆட்சியில் உள்ளது. முதலில், மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்த நிலையில், 2013-ல் அவர் புற்றுநோயால் மறைந்தார். அதன்பிறகு, நிகோலஸ் மதுரோ அந்நாட்டின் அதிபரானார்.
இந்நிலையில், வெனிசுவேலாவில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நிகோலஸ் மதுரோ 53.67 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடிய நிலையில், நாடாளுமன்றத் தலைவராக ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.
இதன்மூலம் அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பேசிய ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ், தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படவிருப்பதாக உறுதியளித்தார். அதேசமயம், சுதந்திரமாகவும், இறையாண்மை உரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை தோற்கடிப்பதாகவும் சபதம் ஏற்றார். வெனிசுலா அதிபராக தேர்வாகியுள்ள நிக்கோலஸ் மதுரோ வரும் 10ஆம் தேதி முறைப்படி பதவியேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது. தேசிய தேர்தல் கவுன்சிலின் (CNE) தலைவர் எல்விஸ் அமோரோசோ, மதுரோவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சிகள் ஒரு பெரிய அளவிலான வாக்குப்பதிவு தள முடிவுகளை வெளியிட்டு, எட்மண்டோ கோன்சலஸ் ஒரு பரந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைக் காட்டுவதாக தெரிவித்தன. இதனால் தேர்தலுக்குப் பிறகு, அதிபரின் வெற்றியை எதிர்த்து அந்நாட்டில் மோதல் வெடித்தது.
இந்த வன்முறையில் 28 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். 2,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறைக்கு எதிராக எட்மண்டோ கோன்சலஸ் உருட்டியா சதி மற்றும் மோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டார். இதையடுத்து கொஞ்ச நாட்கள் உள்ளூரிலேயே தலைமறைவாக இருந்த எட்மண்டோ, பின்னர் ஸ்பெயினில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே, அவர் அர்ஜெண்டினாவுக்கு நாடு கடத்தப்பட இருப்பதாகத் தகவல் பரவியுள்ளது. இதையடுத்து வெனிசுலா நாட்டு அரசாங்கம் அவரைப் பற்றி தகவல் தருபவருக்கு $100,000 சன்மானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவின் நட்பு நாடான ரஷ்யா உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே ஜூலை தேர்தலில் மதுரோவை வெற்றியாளராக அங்கீகரித்துள்ளன. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள், அர்ஜென்டினா ஆகியன மதுரோவை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.