உலகம்

“மனிதாபிமான உதவிகளை தடுப்பதா?” - வெனிசுலா இடைக்கால அதிபர் வேதனை

webteam

வெனிசுலாவுக்கு வரும் நிவாரணப் பொருட்களை தடுத்து நிறுத்துவது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம் என அந்நாட்டு ராணுவத்தை இடைக்கால அதிபர் ஜுவன் கைடோ எச்சரித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெனிசுலா மக்களுக்கு உதவுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளன. இந்த நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்குள் எடுத்து வருவதற்கு அதிபர் மதுரோ தடை விதித்துள்ளார். 

இதன் காரணமாக அண்டை நாடான கொலம்பியாவின் எல்லை அருகே உள்ள cucuta என்ற பகுதியில் நிவாரணப் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்குள் எடுத்து வருவதற்கு ராணுவம் தொடர்ந்து மறுத்து வருவதால், இடைக்கால அதிபர் கைடோ கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

மனிதாபிமான உதவிகள் வந்து சேருவதை தடுப்பது, மனிதாபிமானத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றமாகும் என ராணுவத்தை அவர் எச்சரித்துள்ளார். வெனிசுலா எல்லைப் பகுதியில் குவிந்திருக்கும் மருத்துவர்களும், மருந்துகள்‌ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நாட்டுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.