உலகம்

''ஜனநாயகத்தை மீட்கும் வரை போராடுவோம்''- வெனிசுலா அதிபருக்கு எதிராக எச்சரிக்கை

webteam

வெனிசுலாவில் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என அதிபர் மதுரோவை கொல்ல முயன்ற புரட்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வெனிசுலா தலைநகர் கராகசில் நடந்த பாதுகாப்பு‌ப் படை நிகழ்ச்சியின்போது, அதிபர் மதுரோவை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் மதுரோ உயிர் தப்பினார். எனினும் 7 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். சம்பவத்தை அடுத்து, தம்மை கொல்‌வதற்கு கொலம்பியாவும், அமெரிக்காவும் சதி செய்து வருவதாக மதுரோ குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு வெனிசுலாவின் புரட்சிப் படை பொறுப்பேற்றுள்ளது.

 இது தொடர்பாக அந்த அமைப்பு வெளி‌யிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் மீட்டெடுக்கும் வரை போராட்டம் ஓயாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என மதுரோ அறிவித்துள்ளார். அதேசமயம் இந்த சம்பவத்தை அரசு சாதகமாக பயன்படுத்தி மனித உரிமை மீறல்களில் ஈடுபடக் கூடாது என எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.