உலகம்

கொலம்பியா உடனான உறவை முறித்து கொண்டது வெனிசுலா...!

webteam

கொலம்பியா உடனான உறவை வெனிசுலா நாடு முறித்து கொண்டுள்ளது.

வெனிசுலாவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார சீர்குலைவினால், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இடைக்கால அதிபராக தன்னைத் தானே பிரகடனம் செய்து கொண்ட கைடோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

இதற்காக வெனிசுலாவின் அண்டை நாடான கொலம்பியாவில் உதவி மையங்களையும் கைடோ திறந்து வைத்தார். அமெரிக்கா மற்றும் போர்ட்டோ ரிகோவில் இருந்து உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்தச்சூழலில், வெளிநாட்டு உதவிகளை தொடர்ச்சியாக மறுத்து வரும் அதிபர் மதுரோ, வெனிசுலாவின் எல்லைப் பகுதிகளை மூட உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உதவிப் பொருட்களை எடுத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது கொலம்பியா நாடு உடனான உறவை முறித்து கொள்வதாக வெனிசுலாவின் அதிபர் மதுரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் மதுரோ, “கொலம்பியா நாட்டிலிருந்து வெனிசுலாவிற்கு எதிராக வன்முறைகள் தூண்டப்படுகின்றன. இதனால் கொலம்பியா உடனான உறவை முறித்து கொள்வதாக” கூறினார்.

மேலும் வெனிசுலா நாட்டிலுள்ள கொலம்பியா தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் வெனிசுலாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அதிபர் மதுரோ உத்தரவிட்டுள்ளார்.