model image x page
உலகம்

உஸ்பெகிஸ்தான் | காதலியை கவர சிங்கத்தின் கூண்டுக்குள் சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்! அதிர்ச்சி வீடியோ!

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் காதலியைக் கவர்வதற்காக சிங்கத்துடன் அருகே இருக்கச் சென்று அது சோகத்தில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

காதலில் விழும் பலரும், தங்களுடைய காதலர்களைக் கவர்வதற்காக ஏதாவது வித்தியாசமான செயல்களைச் செய்கிறார்கள். அந்த வகையில், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் காதலியைக் கவர்வதற்காக சிங்கத்துடன் அருகே இருக்கச் சென்று அது சோகத்தில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் லயன் தனியார் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அப்பூங்காவில் பணிபுரியும் 44 வயதான எஃப்.இரிஸ்குலோவ் என்பவர், தன் காதலியைக் கவர்வதற்காக 3 சிங்கங்கள் அடைக்கப்பட்ட கூண்டுக்குள் நுழைந்துள்ளார். இதைப் பதிவுசெய்யும் வகையில் வீடியோவும் எடுத்துள்ளார்.

அப்போது, சிங்கங்கள் இருக்கும் கூண்டின் கேட்டைத் திறந்து, ‘சிம்பா’ என அழைத்தபடி நுழைகிறார். பின்னர், அந்த நபர் சிங்கங்களுக்கு அருகாமையில் இருப்பது வீடியோவில் தெரிகிறது. தொடர்ந்து, ‘சிம்பா’ என்று அழைத்து அவற்றை அவர் கொஞ்சுகிறார். முதலில் ஆபத்தை உணராத அவர், அமைதியாகத் தோன்றினார். ஆனால் சிங்கங்களில் ஒன்று அவரைத் தாக்கத் தொடங்கியபோது நிலைமை மோசமடைந்தது. மற்ற சிங்கங்களும் அவரை சூழ்ந்து தாக்கத் தொடங்கியது பதிவாகி உள்ளது. வீடியோவின் இறுதியில் பயங்கரமான அலறல் சத்தம் கேட்கிறது. அது கேட்பவர்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

இதில் பலத்த காயங்களால் அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம், கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.