தென் அமெரிக்காவில் உள்ள நாடான வெனிசுலா தற்போது உலகளவில் கவனம் ஈர்க்கும் நாடாகியுள்ளது. தங்கள் நாட்டிற்குள் போதை மருந்துகளை கடத்திவருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டிவரும் நிலையில் அதை வெனிசுலா மறுக்கிறது. போதைக் கும்பல்களை அமெரிக்கா தாக்கி அழிப்பதோடு வெனிசுலாவை தாக்கக்கூடும் என்றும் தகவல்கள் உள்ளன. ஆனால் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவை எதிர்த்து போராடப்போவதாக கூறியுள்ளார்.
வெனிசுலாவில் இருந்து போதைப்பொருட்கள் பசிபிக் பெருங்கடல், மெக்சிகோ வழியாகவும் மறுபுறம் ஜமைக்கா, கியூபா வழியாகவும் கடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.
வெனிசுலாவில் இருந்து படகுகள், சிறு கப்பல்கள் வழியாக போதைப்பொருட்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதாக கூறும் அமெரிக்கா, இது போன்று வருபவர்களை தாக்குகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.. அதாவது, செப்டம்பர் மாத துவக்கத்திலிருந்து, அமெரிக்கா தென் கரீபியன் பகுதியில் சுமார் 20 வேகப் படகுகள் மீது நடத்திய தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதில், பெரும்பாலும் வெனிசுலா நாட்டு மக்கள் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெனிசுலா நாட்டின் மொத்த பரப்பளவு 9.1 லட்சம் சதுர கிலோ மீட்டர். அதாவது தமிழ்நாட்டை போல் 7 மடங்கு பெரிய நாடு. மக்கள்தொகை 2.8 கோடி. இதன் பொருளாதார மதிப்பு 108 பில்லியன் டாலர். மக்களின் சராசரி ஆயுட்காலம் 73 ஆண்டுகள். குழந்தை பிறப்பு விகிதம் சராசரியாக 2ஆக உள்ளது. இங்கு பெரும்பாலானோர் ஸ்பானிஷ் மொழி பேசுகின்றனர். கிறிஸ்தவ மதத்தை பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர். தலைநகர் காரகாஸ் இந்நாட்டின் பெரிய நகரம். இங்கு 30 லட்சம் பேர் வசிக்கின்றனர்.
மிக முக்கிய எரிபொருளான கச்சா எண்ணெய்யை உலகிலேயே அதிகம் இருப்பு வைத்துள்ள நாடு வெனிசுலா. கடந்த 2023 ஆய்வுப்படி வெனிசுலா 303 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளத்துடன் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. 267 பில்லியன் பீப்பாய் வளத்துடன் சவுதி அரேபியா 2ஆம் இடத்தில் உள்ளது. 209 பில்லியன் பீப்பாய் இருப்புடன் ஈரான் 3ஆம் இடத்திலும் 164 பில்லியன் பீப்பாய் இருப்புடன் கனடா 4ஆம் இடத்திலும் 145 பில்லியன் பீப்பாய் இருப்புடன் ஈராக் 5ஆம் இடத்திலும் உள்ளன.