ட்ரம்ப், கிளாடியா, ட்ரூடோ எக்ஸ் தளம்
உலகம்

அமலுக்கு வந்த அமெரிக்காவின் வரிவிதிப்பு | ட்ரம்ப் நடவடிக்கைக்கு உடனடியாக பதிலடி கொடுத்த நாடுகள்!

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளும் பதிலடி கொடுத்துள்ளன.

Prakash J

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பு மற்றும் அறிவிப்புகளால் கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான அரசியல் களம் உலகம் முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. இதனால் அந்த நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிலவலாம் எனக் கூறப்பட்ட நிலையில், மெக்சிகோ மற்றும் கனடா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அழுத்தம் கொடுக்கும் வகையில், கனடா மற்றும் மெக்சிகோவிற்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். ஒருமாத காலம் கொடுத்தும், அதை கட்டுப்படுத்த இருநாடுகளும் தவறிவிட்டதாக குறிப்பிட்ட அவர், சீனாவுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டு கனடாவும் மெக்சிகோவும் பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், சீனாவுக்கு இந்த வரிவிதிப்பு தொடரும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் சாட்டையைக் கையில் எடுத்துள்ளார்.

சீனா, அமெரிக்கா

சீனா பதிலடி

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு சீனா தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில விவசாயம் மற்றும் உணவு பொருட்களுக்கு10 முதல் 15 விழுக்காடு கூடுதல் வரியை சீனா அரசு விதித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து சோயாபீன்ஸ், மக்காச்சோளம், இறைச்சி வகைகள், பழங்கள், காய்கறிகள், பால் சார்ந்த பொருட்கள், கோதுமை ஆகிய பொருட்களை அமெரிக்கா அதிகளவில் சீனாவில் இறக்குமதி செய்யும் சூழலில், அவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கை, வரும் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென சீன நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மிரட்டல்கள் மற்றும் ஒடுக்குமுறையை கண்டு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

கனடாவும் பதிலடி

அதுபோல் கனடாவும் களத்தில் இறங்கியுள்ளது. கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடா மீது கூடுதலாக 25 விழுக்காடு இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்155 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கனடா அரசு கூடுதலாக 25 விழுக்காடு வரியை விதித்துள்ளது. இருநாடுகளும் மாறி மாறி வரிவிதிப்பை கையில் எடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடா மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கனடா, மெக்சிகோ, அமெரிக்கா கொடிகள்

அதேபோல், வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்தும்பட்சத்தில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுடன் மெக்சிகோ தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷென்பாம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா எந்த முடிவை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள மெக்சிகோ தயாராக இருப்பதாக கூறியுள்ள அதிபர் கிளாடியா, மெக்சிகோவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், இன்று வரி விதிப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மெக்சிகோ அதிபர் இவ்வாறு கூறி உள்ளார்.