ட்ரம்ப், நோபல் எக்ஸ் தளம்
உலகம்

நோபல் பரிசு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குமுறல்!

"தனக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டால் அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம்" என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

"தனக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டால் அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம்" என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த மாதம் 10ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமைதிக்கான நோபல் தனக்குக் கிடைக்காது என ஆரம்பத்தில் கூறிவந்த ட்ரம்ப், தற்போது அதை தனக்குக் கொடுங்கள் என மறைமுகமாகக் கேட்கத் தொடங்கிவிட்டார். அதற்காக, தனக்கு வழங்கும்படி அவர் பல நாடுகளை வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அவர், இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், கொசோவோ-சொ்பியா, காங்கோ-ருவாண்டா, எகிப்து-எத்தியோப்பியா, ஆா்மீனியா-அஜா்பைஜான் நாடுகளுக்கு இடையிலான போா்களை நிறுத்தியதாகத் தொடர்ந்து கூறிவருகிறார். அதிலும் இந்தியா - பாகிஸ்தான் போரை தாமே நிறுத்தியதாக, இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை கூறியுள்ளார். மேலும், உக்ரைன் - ரஷ்யா மற்றும் காஸா - இஸ்ரேல் இடையே போரை நிறுத்துவதற்கு தாம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதன் காரணமாகவும் தனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட வேண்டும் என அவர் சமீபகாலமாகத் தெரிவித்து வருகிறார்.

இதையடுத்து, ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான், இஸ்ரேல், கம்போடியா, அர்மேனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அது தொடர்பாக நோபல்கமிட்டிக்கு பரிந்துரைக் கடிதங்களையும் அவர்கள் அனுப்பியுள்ளனர். விரைவில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அது ட்ரம்ப்க்கு வழங்கப்படுமா என்கிற விவாதங்களும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. ஆனால், அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என தகவல் உறுதியாகி உள்ளது.

ட்ரம்ப்

இந்த நிலையில், காஸாவில் போர் நிறுத்தம் குறித்த தன் 20 அம்ச திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ளும் என நம்புவதாக தெரிவித்த ட்ரம்ப், இதுவும் நிறைவேறிவிட்டால் தான் நிறுத்திய போர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற செயற்கரிய செயல்களை யாராலும் செய்ய முடியாது என்றும் இதற்காக தனக்கு நோபல் பரிசு தந்தே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் அந்த விருது வேறு யாராவது ஒருவருக்குத்தான் செல்லும் என்றும் அதுபோன்று நடந்தால் அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.