அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். அந்த வகையில், முன்னமே அறிவித்தபடி, கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு புதிய வரிகளை அறிவித்தார்.
அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. கனடாவின் ஆற்றல் துறை சார்ந்த இறக்குமதிகளுக்கு 10% வரியும் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மெக்சிகோ, கனடா அரசுகளும் அமெரிக்கா பொருட்களுக்கான வரியை உயர்த்தின.
அதேபோல், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதற்கிடையே, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், சீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி தொடரும் என கூறப்பட்டது. இதையடுத்து, சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது. சீன அரசு மேற்கொண்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு பொருட்கள் மீது 15 விழுக்காடு வரியும், குறிப்பிட்ட ரக கார்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது 10 விழுக்காடு கூடுதல் வரியும் விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் பெரிய என்ஜின்கள் கொண்ட கார், சரக்கு வாகனங்கள், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றின் இறக்குமதி பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.
இதுதவிர, சட்டத்தில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி சீன பொருட்களை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யும் போக்கும் இருந்து வந்த நிலையில் அதற்கான ஒரு வழியான பார்சல் தபால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பொம்மைகள், ஸ்மார்ட்ஃபோன்கள் பார்சல் முறையில் அதிகளவில் ஏற்றுமதியாகி வந்த நிலையில் தற்போது அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.