அமெரிக்க முன்னாள் காங்கிரஸ்காரரும் பொருளாதார நிபுணருமான டேவ் பிராட் மற்றும் இந்திய-அமெரிக்க தூதர் மஹ்வாஷ் சித்திக் ஆகியோர் H-1B விசா திட்டம் குறித்து மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H-1B விசா, செப்டம்பர் 2025 முதல் $100,000 ஆக உயர்த்தப்பட்டதால், இந்தியர்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க நீதிமன்றத்திலேயே வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தியர்கள் மாற்றுப் பாதையைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், H-1B விசா மோசடி பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க முன்னாள் காங்கிரஸ்காரரும் பொருளாதார நிபுணருமான டேவ் பிராட் மற்றும் இந்திய-அமெரிக்க தூதர் மஹ்வாஷ் சித்திக் ஆகியோர் H-1B விசா திட்டம் குறித்து மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொருளாதார நிபுணர் பிராட், பாட்காஸ்ட் நிகழ்வு ஒன்றில் தெரிவித்திருப்பதாக ’இந்தியா டுடே’செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, ”இந்த அமைப்பு தொழில்துறை அளவிலான மோசடியால் கைப்பற்றப்பட்டுள்ளது. H-1B விசாக்களில் 71% இந்தியர்களிடமிருந்தும், 12% சீனர்களிடமிருந்தும் பெறப்பட்டது. H-1Bக்கான தேசிய வரம்பு 85,000 ஆக இருந்தாலும், இந்தியாவில், அதிலும் சென்னை மாவட்டம் 2,20,000 H-1B விசாக்களைப் பெற்றன. இது வரம்பைவிட 2.5 மடங்கு அதிகம். இது ஒரு பெரிய மோசடி” என பிராட் அதில் தெரிவித்துள்ளார். சென்னை துணைத் தூதரகம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களிலிருந்து விண்ணப்பங்களைப் பெறுகிறது. இது உலகின் மிகவும் பரபரப்பான H-1B செயலாக்க மையங்களில் ஒன்றாகும்.
இதேபோன்ற மோசடிக் குற்றச்சாட்டை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் பணிபுரியும் இந்திய-அமெரிக்க தூதர் மஹ்வாஷ் சித்திக்கும் வைத்திருந்தார். அவர், ”இந்தியாவில் இருந்துவரும் குடியேறாத விசா விண்ணப்பங்களில் 80-90% மோசடியானவை என்றும், அவற்றில் பெரும்பாலானவை H-1B விசாக்கள்” என்றும் கூறியிருந்தார். சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் (2005–2007) தூதரக அதிகாரியாக இருந்த காலத்தில், இந்தப் பிரச்னையை வாஷிங்டனிடம் பலமுறை சுட்டிக்காட்டியதாகவும், ஆனால் அரசியல் அழுத்தம் காரணமாக எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக இது செய்யப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முக்கிய அதிகாரி ஹோவர்ட் லுட்னிக், “H-1B விசா முறையில் மோசடி நடக்கிறது” என்று கூறியிருந்தார். மோசடி என்று கூறப்படும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் லுட்னிக் உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இவர்கள் இருவரும் தனித்தனியாக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த புதிய குற்றச்சாட்டுகள் H-1B அமைப்பின் நேர்மை குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன. அதேநேரத்தில், H-1B விசா விண்ணப்பக் கட்டண உயர்வும், புதிய விதிகளும் இந்தியர்களுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.