இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது செயற்கை நுண்ணறிவு (AI). இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த வளர்ச்சியை மேலும்மேலும் உயர்த்தும் நோக்கில் போட்டிபோட்டுச் செயல்பட்டு வருகின்றன தொழில்நுட்ப நிறுவனங்கள்.
இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது சீனாவும் போட்டியில் களத்தில் குதித்துள்ளது. தவிர, அது சமீபத்தில் அறிமுகப்படுத்திய புது மாடலால் அமெரிக்க மற்றும் உலக வர்த்தகப் பங்குச் சந்தைகளே ஆட்டம் கண்டன. ஆம், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. சீன நிறுவனம் அறிமுகப்படுத்திய டீப்சீக் (Deepseek) ஏஐ மாடல், அமெரிக்காவின் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் நவீன வசதிகளை வழங்கிவரும் நிலையில், டீப்சீக் ஆர்1 அனைத்து நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
தவிர சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ செயலிகளைவிட Deepseek அதிக செயல்திறனைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஓப்பன் ஏஐ நிறுவனம், 100 மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியை உருவாக்கியது. ஆனால், Deepseek நிறுவனமோ அதன் மென்பொருளை வெறும் 6 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கியது. இதனால் சாட்ஜிபிடியைத் தாண்டி, ஆப்பிளின் US ஸ்டோரிலும் உலகளவிலும் டீப்சீக் செயலி அதிகமான டவுன்லோட்களை கடந்தது. மேலும், அமெரிக்க பங்குச் சந்தையையும் இந்த டீப்சீக் பாதிப்புக்குள்ளாக்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ”டீப் சீக் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அமெரிக்க தொழில்துறைக்கு எச்சரிக்கை மணி” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சீன நிறுவனம் அறிமுகப்படுத்திய டீப்சீக் (Deepseek) ஏஐ மாடலை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ”டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளது. அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை. சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாடலுக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.