செய்தியாளர்: M. மீரா
மத்திய கிழக்கில் ஏற்கெனவே நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில், ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிப் படைகளுக்கும் சவுதி ஆதரவு பெற்ற PLC படைகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மேற்கு ஏமனில் நடைபெற்ற கடுமையான சண்டைக்குப் பிறகு, ஹயெஸ் (Hays) நகரை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக ஹவுதிப் படைகள் தெரிவித்துள்ளன. இதன்மூலம், மேற்கு ஏமனில் தங்களது கட்டுப்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் ஹவுதிகள் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
புவியியல் ரீதியாக ஹயெஸ் என்பது கடலில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் உள்நோக்கி அமைந்துள்ள ஒரு முக்கியமான நகரமாகும். இது நேரடித் துறைமுகம் அல்ல. இந்நகரத்தைக் கைப்பற்றியதன்மூலம், அதன் அருகிலுள்ள செங்கடல் துறைமுக நகரங்களான அல்-கவ்கா (Al Khawkhah) மற்றும் புகழ்பெற்ற மோக்கா (Mokha) ஆகிய துறைமுகப் பகுதிகளுக்குள் ஹவுதிப் படைகள் ஊடுருவி, தங்களது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தி வருகின்றன.
முன்னதாக இந்த ஹயெஸ் பகுதியை ஏமன் அரசுப் படைகள் மீட்டதாக அறிவித்திருந்தபோதிலும், ஹவுதிகளின் தொடர் தாக்குதலால் அரசுப் படைகள் அங்கிருந்து பின்வாங்கியது. அதனால் தற்போது ஹயெஸ் நகரம் முழுமையாக ஹவுதிகளின் வசம் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஹவுதிகள் வெளியிட்ட காணொளிகளில், அங்குள்ள பாதுகாப்புத் துறை அலுவலகக் கட்டடத்துக்கு வெளியே தங்களது போராளிகள் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, கிழக்கு அல்-ஜவ்ஃப் பகுதியிலும் சவுதி ஆதரவு பெற்ற படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர். எதிரிப் படைகள் குவிந்திருந்த இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், பல ராணுவ வாகனங்களை அழித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், மோதலின்போது பல வீரர்களைச் சிறைபிடித்ததாகவும் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பதிலடியாக ஏமனில் ஹவுதிப் படைகள் மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மூன்று நாட்களில் பல்வேறு ஏமன் மாகாணங்களில் 121 வான்வழித் தாக்குதல்களும் , 12 மணி நேரத்தில் மட்டும் 48 தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் டஜன் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது ஹவுதிப் படை. இதனால் சவுதி ஆராம்கோ கட்டமைப்புகளும், கிங் காலத் விமானப்படைத் தளமும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களை செயற்கைக்கோள் படங்களும் உறுதி செய்துள்ளன.
இந்த மோதல் ஏமனின் எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கும் நிலை இல்லாமல், உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாக மாறியுள்ளது. சவுதியின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால் ஏற்கெனவே உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மேலும் அழுத்தம் ஏற்படலாம்.
ஏமனின் முக்கிய நகரங்களான ஹயெஸ் (Hays) மற்றும் மொக்கா (Mokha) போன்ற கடலோரப் பகுதிகளை ஹவுதிப் படைகள் கைப்பற்றியிருப்பது, செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டேப் (Bab el-Mandeb) ஜலசந்தி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அங்கு தங்களின் ஏவுகணைகள் (Anti-ship missiles) மற்றும் தற்கொலைப்படை ட்ரோன்களை மிக எளிதாக நிலைநிறுத்த முடியும். இதனால், செங்கடலில் செல்லும் அமெரிக்க போர்க்கப்பல்களை மிகக் குறைந்த தூரத்திலிருந்தே துல்லியமாகத் தாக்கக்கூடிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
மேலும் அமெரிக்க போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை ஹவுதிப் படைகளால் நிலப்பரப்பில் இருந்தபடியே நேரடியாகக் கண்காணிக்க முடியும். இதற்கு ஈரான், ரஷ்யா அல்லது சீனா போன்ற நாடுகளின் செயற்கைக்கோள் தரவுகளும் அவர்களுக்கு உதவக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. ஹவுதிப் படைகளின் இந்த நிலப்பரப்பு நகர்வுகள், அமெரிக்க போர்க்கப்பல்களைத் தற்காப்புப் பாணியிலிருந்து நேரடி மோதல் நிலைக்குத் தள்ளியுள்ளன. இதனால் செங்கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படை மிகத் தீவிரமான பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியுள்ளது.