பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பகமாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இப்பரிந்துரையின்படி இருதரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட எஞ்சிய பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் பணியில் ஹமாஸ் ஈடுபட்டு வருகிறது. மேலும் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறி வருகின்றன. இதையடுத்து, காஸாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஹமாஸ் முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், 8 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காஸா முனையில் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பொதுவெளியில் சுட்டுக்கொன்றனர். காஸா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஹமாஸ் மற்ற ஆயுதமேந்திய பாலஸ்தீன குழுக்களுடன் மோதி வருவதால், ஹமாஸின் காட்டுமிராண்டித்தனமான பழிவாங்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “காஸாவில் உள்நாட்டு வன்முறைகள் தொடர்ந்தால், உள்ளே புகுந்து அவர்களை கொல்வதைவிட தங்களுக்கு வேறு வழி இல்லை” என எச்சரித்திருந்தார். காஸாவில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரண்டாம்கட்ட போர் நிறுத்தத்தை நிறைவு செய்வது அவசியம் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பகமாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ”இதுபோன்ற தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறுவதாகும். உடனடியாக போர் நிறுத்த மீறலை ஹமாஸ் மேற்கொள்ளும் என்று நம்பகமான தகவல்கள் காசா அமைதி ஒப்பந்த உத்தரவாத நாடுகளுக்கு கிடைக்க பெற்றுள்ளன.பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல், போர் நிறுத்த ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும்.
தாக்குதலை ஹமாஸ் தொடர்ந்தால் அங்குள்ள காஸா மக்களைப் பாதுகாக்கவும், போர்நிறுத்த ஒருமைப்பாட்டைக் காக்கவும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காஸா மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமைதியை பேணவும் அமெரிக்காவும், அதற்கு ஆதரவளிக்கும் நாடுகளும் தங்களது உறுதிப்பாட்டில் ஸ்திரமாக உள்ளனர்” என அமெரிக்காவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.