jd vance family எக்ஸ் தளம்
உலகம்

ஆந்திரா to USA | மனைவி உடன் இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர்.. யார் இந்த உஷா வான்ஸ்?

அமெரிக்க துணை அதிபர் JD VANCE, 4 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

Prakash J

இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்க துணை அதிபர் JD VANCE, 4 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அமெரிக்க துணை அதிபருக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்பு அளித்தார். துணை அதிபருடன் அவரது மனைவி உஷா, பிள்ளைகள் இவான், விவேக், மீரா பெல் ஆகியோரும் வந்துள்ளனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸ்ட் உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு அமெரிக்க துணை அதிபர் குடும்பத்துடன் சென்றார். இன்று மாலை ஆறரை மணியளவில் பிரதமர் மோடியின் இல்லத்திற்கு துணை அதிபர் செல்கிறார். இதன்பின் நடைபெறும் பேச்சுவார்த்தையில் வரி விதிப்புகள், வர்த்தக உறவு மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சர்வதேச அரசியல் நகர்வுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஜே.டி.வான்ஸ்

குறிப்பாக இந்தியா - அமெரிக்கா இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பிரதானமாக விவாதிக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்க துணை அதிபருக்கு பிரதமர் மோடி விருந்தளிக்கிறார். இதைத்தொடர்ந்து அடுத்த சில நாட்களுக்கு டெல்லியிலுள்ள ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டை, ராம்பாக் அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கு துணை அதிபர் குடும்பத்தினர் செல்கின்றனர்.

யார் இந்த உஷா வான்ஸ்?

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை அதிபரின் மனைவி உஷா வான்சுக்கும், இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவருக்கும் சென்னைக்குமான தொடர்பு என்ன என்றும் பார்க்கலாம். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசில், துணை அதிபர் பதவியில் இருப்பவர் ஜே.டி. வான்ஸ். இவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். ஜே.டி.வான்சின் பரப்புரைகளின்போது, உஷா அளிக்கும் ஊக்கம் பெரிதும் பேசப்பட்டது. உஷா சிலுக்குரி வான்ஸ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவரது வேர், ஆந்திராவில் கிளைவிட்ட குடும்பம். உஷா வான்சின் தாத்தா ராமசாஸ்திரி சென்னை ஐஐடியில் இயற்பியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.இதனால் அக்குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது.

ஜே.டி.வான்ஸ், உஷா

1959ல் மெட்ராஸ் ஐஐடி தொடங்கியபோது, முதல் இயற்பியல் துறை தலைவராக இருந்தவர் உஷா வான்சின் தாத்தா ராமசாஸ்திரி. 1959இல் இருந்து 1962 வரையும், 1967இல் இருந்து 1975 வரையும், 1979ல் இருந்து 1980ஆம் ஆண்டுவரையும், மெட்ராஸ் ஐஐடி இயற்பியல் துறை தலைவர் பொறுப்பை அவர் வகித்தார். அப்போதைய தமிழக முதலமைச்சர் பக்தவச்சலத்திடம் விருதுகளையும் பெற்றிருக்கிறார் ராமசாஸ்திரி. இவரின் புகைப்படங்கள் இப்போதும் சென்னை ஐஐடி வசம் இருக்கின்றன. அதேபோல, 1974இல் உஷாவின் தந்தை ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். உஷா வான்ஸின் குடும்பம், 70களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் குடியேறியது. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த உஷா வான்ஸ், யேல், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் பயின்றவர். அமெரிக்க தலைமை நீதிபதியின் சட்ட எழுத்தராகவும், பின்பு வழக்கறிஞராகவும் இருந்தவர். கிறிஸ்துவரான ஜே.டி. வான்ஸை திருமணம் செய்து கொண்டிருந்தாலும், இன்றும் இந்து மதத்தையே பின்பற்றி வருகிறார் உஷா . பகவத் கீதை தொடர்பாக புத்தகம் எழுதியிருக்கிறார்.

அதேவேளையில், தனது கிறிஸ்தவ நம்பிக்கையை கண்டடைய உஷாதான் உதவினார் என்று, மனைவியை எப்போதும் பாராட்டுபவர் ஜே.டி.வான்ஸ். அதிபரின் மனைவி முதல் குடிமகளாக கருதப்படும் நிலையில், துணை அதிபரின் மனைவி 2 ஆவது குடிமகளாக குறிப்பிடப்படுவது அமெரிக்க வழக்கம். அந்த வகையில் இந்த பொறுப்பை வகிக்கும் முதல் இந்திய- அமெரிக்க பெண், உஷா வான்ஸ் என்பதோடு, அந்த பொறுப்பில் இருக்கும் முதல் இந்து பெண்மணியாகவும் இருக்கிறார்.