அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சர்வதேச சந்தையில் இந்தியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அனுமதி அளித்தது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவே இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு மட்டும் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதற்கு அனுமதி அளித்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா நேற்று முழு வீச்சில் அமல்படுத்தியது. குறிப்பாக ஈரானின் வங்கி, எரிசக்தி துறை மீது புதிதாக தடைகள் விதிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்தியா, சீனா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகிய எட்டு நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதற்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வாஷிங்டன் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்திருப்பதாகக் கூறினார்.
எனினும் கச்சா எண்ணெய் விவகாரத்தில் மெதுவாக பிடியை இறுக்க முடிவெடுத்திருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலும் முடக்கவே தாம் முதலில் திட்டமிட்டதாகவும், ஆனால் இந்நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் மிகப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.