ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடுமையான பொருளாதார தடை முழு வீச்சில் அமலுக்கு வந்தது.
சர்வதேச விதிகளை மீறி ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அண்மையில் ஈரானுடான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். அத்துடன் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலும் முடக்கும் நோக்கில், அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீதும் பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக எச்சரித்திருந்தார்.
எனவே, நவம்பர் 4 ஆம் தேதிக்குள் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை உலக நாடுகள் முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இதற்கு முன் தளர்த்தப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது மீண்டும் விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரானுடனான ஒப்பந்தத்தை தொடரப் போவதாகவும் அந்நாடுகள் அறிவித்துள்ளன.
ஐரோப்பாவுக்கு தேவையான கச்சா எண்ணெய், ஈரானிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளன. எனினும் அமெரிக்காவின் தடை காரணமாக ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 10 லட்சம் பேரல் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
இதனால் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹஸன் ரொஹானி, தடைகளை தகர்தெறிந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாக அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ளார்.