அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம், தனது சேகரிப்பில் இருந்த மூன்று இந்திய வெண்கலச் சிலைகளை மீண்டும் இந்திய அரசிடம் ஒப்படைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆராய்ச்சியின் முடிவில் இந்த மூன்று சிலைகளும் தமிழகக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு அமெரிக்கா திரும்ப அளிக்கவுள்ளது.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள ஸ்ரீ பவ அவுதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, சோழர்காலத்தைச் சேர்ந்த சிவ நடராஜர் சிலை. அடுத்ததாக, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் உள்ள ஆலத்தூர் விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமான சோழர் காலத்தைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் சிலை. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள வீரசோழபுரம் சிவன் கோயிலுக்குச் சொந்தமான விஜயநகர காலத்தைச் சேர்ந்த ஆகிய 3 சிலைகளை, அருங்காட்சியகத்தின் ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், இந்தச் சிலைகள் 1956 மற்றும் 1959-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கூறிய தமிழகக் கோயில்களில் இருந்ததற்கான புகைப்பட ஆதாரங்கள் கிடைத்தன.
அதைத்தொடர்ந்து, இந்தியத் தொல்லியல் துறையும் இந்த ஆதாரங்களை ஆய்வு செய்து, இந்தச் சிலைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டவை என்பதை உறுதி செய்தது. இதையடுத்து, 3 பழங்கால சிலைகளையும் அமெரிக்கா திரும்ப அளிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியத் தொல்லியல் துறை மற்றும் இந்தியத் தூதரகம் ஆகியவை இந்தச் சிலைகளைத் தாயகம் கொண்டு வருவதற்கான இறுதி ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
மேலும், இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு சுவாரஸ்யமான ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், மீட்கப்பட்ட சிவ நடராஜர் சிலையை மட்டும் நீண்டகால குத்தகை அடிப்படையில் அதே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்மூலம், அந்தச் சிலை எவ்வாறு திருடப்பட்டது மற்றும் மீண்டும் மீட்கப்பட்டது என்ற முழு வரலாற்றையும் உலக மக்கள் அறிந்துகொள்ள முடியும் என அருங்காட்சியக இயக்குநர் சேஸ் எஃப். ராபின்சன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 'சிலை திருட்டு தடுப்புப் பிரிவு' மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக இந்தச் சிலைகள் தாயகம் திரும்புகின்றன. இது இந்தியாவின் கலைப் பொக்கிஷங்களை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.