அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கூட்டுத் தாக்குதலால் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தான், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேசமயம், 5-வது நாளாக இன்றும் ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கப் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், காமேனி கொல்லப்பட்டது குறித்தும், ஈரான் மீதான தாக்குதல் குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார். அதன்படி, நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு, ஈரான் முதலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதே காரணம் என புது விளக்கம் அளித்துள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தப்போகிறது என்ற உணர்வு தமக்கு இருந்ததாகவும், அந்த ஆபத்தைத் தடுக்கவே தாம் முன்கூட்டியே தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏபிசி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”அவர்கள் இரண்டு முறை என்னைக் கொல்ல முயற்சித்தார்கள். ஆனால், அதற்குள் நான் முதலில் அவரைப் பிடித்தேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான், நேற்று அளித்தப் பேட்டியில் புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார்.