உலகம்

தென்கொரியா-அமெரிக்கா போர்ப்பயிற்சி: தீயில் எண்ணெய் ஊற்றுவதாக வடகொரியா அதிருப்தி

webteam

தென்கொரியா-அமெரிக்காவின் கூட்டு போர்ப்பயிற்சி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் நடவடிக்கை என்று வடகொரியா கூறியுள்ளது.

வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி, அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டுப் போர்ப்பயிற்சியை நடத்தி வருகின்றன. சுமார் 17 ஆயிரம் அமெரிக்க வீரர்களும், 50 ஆயிரம் தென் கொரிய வீரர்களும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொரியப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இத்தகைய போர்பயிற்சியை நடத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் நடவடிக்கை இது என வடகொரியா தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. ஆனால், இது தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது. குவாம் தீவு மீது தாக்குதல் நடத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கடந்த வாரத் தொடக்கத்தில் வடகொரியா கூறியிருந்தது. ஆனால் வார இறுதியில், மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகக் கருத்துகளைத் தெரிவித்திருந்தது.