உலகம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா?

webteam

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

அமெரிக்காவுடனான எதிர்ப்பு, அணு ஆயுத சோதனை என எப்போதும் பரபரப்புகளுக்குள் சிக்கும் வடகொரியாவும், அதன் அதிபர் கிம் ஜாங் உன்னும் கொரோனா விவகாரத்திலும் கவனம் பெற்றனர். சீனாவுக்கு அருகில் இருக்கும் நாடாக இருந்தாலும் அங்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. கொரோனா தொடங்கியபோதே எல்லைகளை மூடிவிட்டதால் கொரோனா பாதிப்பு இல்லை என வடகொரியா தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய
நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11ம் தேதியே கிம் ஜாங் உன் கடைசியாக ஊடகத்தின் முன் தோன்றியதாகவும் அதற்கு பின் அவர் எங்கும் காணப்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்படும் வட கொரியாவின் முக்கிய விழாவான கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தின் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.

இதற்கிடையே ஏப்ரல் 12ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வட கொரிய விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகளின் தகவலை குறிப்பிட்டு சி என் என் இந்த செய்தியை வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதே வேளையில் கிம் ஜாங் உன் குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் பல ஆண்டுகளாக இப்படித்தான் செய்திகள் வெளிவந்தகொண்டே இருப்பதாகவும், எது உண்மை என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் வட கொரியாவின் முன்னாள் சிஐஏ துணை பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.