அமெரிக்கா மற்றும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் தாக்குதலுக்கு மத்தியில் அமெரிக்கா 3-ஆவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவையும் சுமார் 9,000 கூடுதல் வீரர்களையும் அப்பகுதிக்கு அனுப்ப உள்ளது. இதில் சுமார் 7,000 கடற்படை வீரர்கள் (Sailors) மற்றும் 2,000 மரைன் படைவீரர்கள் (Marines) அடங்குவர். ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான நகர்வுகளின் பின்னணியில் அமெரிக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன. இதனால், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரானின் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. தவிர, அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் அதன் ராணுவத் தளங்கள் மீதான அச்சுறுத்தல்களும் அதிகரித்தன. இதற்கிடையே ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் ஏமன் மற்றும் சவூதியைத் தாக்கி வருகின்றனர். இதற்கிடையே, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் அளித்த அமைதி முன்மொழிவுக்கு அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ பதிலை அனுப்பியுள்ளது. எனினும், இறுதி அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாததால், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தச் சூழலில்தான் துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்க குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில்தான், மத்திய கிழக்கில் தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்கா 3-ஆவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவையும் சுமார் 9,000 கூடுதல் வீரர்களையும் அப்பகுதிக்கு அனுப்ப உள்ளது. இதில் சுமார் 7,000 கடற்படை வீரர்கள் (Sailors) மற்றும் 2,000 மரைன் படைவீரர்கள் (Marines) அடங்குவர். ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான நகர்வுகளின் பின்னணியில் அமெரிக்க அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஈரானுக்கு எதிரான ராணுவ பலத்தை மேலும் வலுப்படுத்தவும், தேவைப்பட்டால் புதிய தாக்குதல்களை நடத்த தயார்நிலையில் இருக்கவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் படையெடுப்பின் மூலம், மத்திய கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கக் கடற்படை மற்றும் மரைன் வீரர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேலாக அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.