உலகம்

கிம் ஜாங் உன் வழங்கிய கடிதத்தை ட்ரம்பிடம் வழங்குகிறார் வடகொரிய பிரதிநிதி

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே திட்டமிட்டபடி சந்திப்பு நடக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

நியூயார்க்கில் வடகொரிய பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பாம்பியோ, ட்ரம்ப் - கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்பை நடத்துவதற்கான முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். எனினும் மேலும் சவால்களை கடக்க வேண்டி இருப்பதால் திட்டமிட்டபடி சந்திப்பு நடக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை என அவர் கூறினார்.

வடகொரிய பிரதிநிதிகளுடனான சந்திப்பு சரியான திசையில் சென்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்த அவர், இரு நாட்டுக்கும் இதுவொரு முக்கியமான கட்டம் என்றும், கூடிவந்துள்ள சந்தர்ப்பத்தை இரு நாடுகளும் வீணாக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே நியூயார்க்கில் பேச்சுவார்த்தையை முடித்த பின்னர் வாஷிங்டன் செல்லவுள்ள வடகொரிய பிரதிநிதிகள், அதி‌பர் ட்ரம்பை சந்தித்து, கிம் ஜாங் உன் வழங்கிய கடிதத்தை அவரிடம் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மைக் பாம்பியோவும் உறுதி செய்துள்ளார்.