கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் இந்த தேர்தலில் முயன்றதாகக் குற்றம்சாட்டி, ஈரான் மற்றும் ரஷ்யாவில் உள்ள நிறுவனங்கள்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க கருவூல திணைக்களம் தெரிவித்துள்ள அறிக்கையில், 'ஈரானின் புரட்சிகர காவலர் படையின் (IRGC) துணை நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் ராணுவ புலனாய்வு நிறுவனத்துடன் (GRU) இணைந்த அமைப்பு ஆகியன வாக்காளர்களிடையே பதற்றத்தைத் தூண்டும் வகையில், நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருந்தன.
மேலும், மாஸ்கோவை தளமாகக் கொண்ட புவிசார் அரசியல் நிபுணத்துவ மையம் (CGE) தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தவறான தகவல்களை பரப்பியதாகவும் அதேபோல் டீப்ஃபேக்குகளை உருவாக்குவதற்கு வழிகாட்டுதல் மற்றும் மானியம் வழங்கிய'தாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2024 துணை அதிபர் வேட்பாளர் ஒருவர் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் போலி வீடியோவை உருவாக்கியதாகவும் அது தெரிவித்துள்ளது. ஆனால் அந்த துணை அதிபர் வேட்பாளர் யார் என அறிவிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், "அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் உள் விவகாரங்களில் ரஷ்யா தலையிடவில்லை. அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதைப்போல, அமெரிக்க மக்களின் விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்த கருத்துக்கு ஈரான் அரசு பதிலளிக்கவில்லை.