உலகம்

கொரோனாவா? கொள்ளையர்களா? - துப்பாக்கியை வாங்க கடைகளில் குவியும் அமெரிக்கர்கள்!!

webteam

கொரோனா அச்சுறுத்தலால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்காவில், துப்பாக்கியை வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கிவிட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,952 ஆக உள்ளது. 82 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலால் அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் கடினமானதாக உள்ளதாகவும் ஆனால் இதிலிருந்து நாடு விரைவில் மீளும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பால் உலக மக்கள் முகக் கவசத்திற்கும், சானிடைசருக்கும் அலைந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க மக்கள் மட்டும் துப்பாக்கியை வாங்க கடைகளில் காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் அவசரநிலை அமலுக்கு வந்துள்ளதால் ஆள்நடமாட்டமில்லாத‌ சாலைகளில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் நீண்ட‌வரிசையில் காத்திருந்து துப்பாக்கிகளை வாங்கிச் செல்கின்றனர். கொரோனாவைவிட கொள்ளையர்களுக்கு பயப்படும் அமெரிக்கர்களின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி என்பது கடைகளில் வாங்கும் சாதாரண பொருளாக இருக்கிறது. சூப்பர் மார்க்கெட்களில் பணத்தைக் கொடுத்தால் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு வீடு வந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.