china intercontinental ballistic missile test x page
உலகம்

சீனாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. நடுக்கத்தில் அமெரிக்கா!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் சீனா, கண்டம்விட்டு கண்டம் பாயும் நடத்திய ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

Prakash J

அண்டை நாடான சீனா, கடந்த ஜூலை 6ஆம் தேதி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இது ஒரு போலி வெடிபொருளைக் கொண்டு பசிபிக் பெருங்கடலின் சர்வதேச கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தப் பரிசோதனை சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றது. காரணம், இந்த ஏவுகணைகள் 12,000 முதல் 15,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. அதாவது, சீனாவில் இருந்து ஏவப்பட்டால் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை இது மிக எளிதாகச் சென்றடையும் எனக் கூறப்படுகிறது.

சீனாவின் இந்த ஏவுகணை சோதனையால், ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள், தங்களின் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கவலை தெரிவித்திருந்தன. தவிர, சீனாவின் இந்த ஏவுகணைச் சோதனையால், அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளது.

சீனா அர்த்தமுள்ள ஆயுத கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் தெரிவித்துள்ளார். அணுஆயுத பரவலை தடுக்க அமெரிக்கா பாடுபடும்வேளையில், அதற்கு நேர் எதிராக சீனா செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுக்கான பாதுகாப்பு உறுதிமொழிகளில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

usa govt

அதேநேரத்தில், ”இந்தச் சோதனை முற்றிலும் எங்களின் வருடாந்திர வழக்கமான இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகும். இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது இலக்கையோ குறிவைத்து நடத்தப்பட்டதல்ல. எங்களது ஆயுதங்களின் செயல்திறனையும், இராணுவத் தயார் நிலையையும் சோதிக்கவே இது நடத்தப்பட்டது” என சீனா விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.