Paris will turn into a Muslim city Reuters
உலகம்

"பாரிஸ் முஸ்லீம் நகராக மாறிவிடும்": டிரம்ப் கருத்தால் சர்ச்சை... பிரான்ஸ் கலவரத்துக்கு காரணம் என்ன ?

பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் முஸ்லீம் நகராக மாறிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Praveen Joshva L

பிரான்சில் கல்வி மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்த்து மாணவர்கள், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு தழுவிய கலவரம் ஏற்பட்டது. டிரம்ப், குடியேறிகளே காரணம் என கூறியதால் சர்ச்சை உருவானது.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பிரான்சின் 'கெரடேய்' (Créteil) உள்ளிட்ட பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, இடநெருக்கடி மற்றும் உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவற்றைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேரணிகளைத் தொடங்கினர்.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தைக் கையாளக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதால், மாணவர் அமைப்புகளிடையே கோபம் அதிகரித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் பரவின. மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களும் களமிறங்கினர்.

பிரான்சில் ஏற்பட்ட இந்த பிரச்சினையை பயன்படுத்தி சில கும்பல்கள் கடைவீதிகளில் நுழைந்து பொருள்களை சூறையாடி பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர். மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களைத் தாக்கியதோடு, தீவைப்புச் சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இதனால் பிரான்சில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஈடுபட்ட 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 3,000 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

பிரான்சின் இந்த வன்முறைக்கு அரசின் பொருளாதாரக் கொள்கைகளும், கல்வி மற்றும் பொதுத்துறைக்கான நிதிக்குறைப்புமே காரணம் என இடதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. அதே நேரம் வலதுசாரி கட்சிகள், இக்கலவரத்திற்கு பிரான்சின் முன்னாள் காலனி நாடான அல்ஜிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வந்த கட்டுப்பாடற்ற குடியேறிகளே காரணம் எனக் கூறி வருகின்றன.

இந்த நிலையில், பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் கலவரங்கள் மற்றும் வன்முறைகளுக்கு குடியேறிகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது நாட்டின் எல்லைகளை நீண்ட காலத்திற்கு முன்பே மூடியிருக்க வேண்டும் என்று அவருக்கு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தேன் என்றும், குடியேறிகளின் வருகையால் பாரிஸ் நகரம் மிக விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறப்போகிறது என்றும் கூறியுள்ளார். டிரம்ப்பின் இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.