அமெரிக்கா pt web
உலகம்

குடியேற்ற விசா நடைமுறை | 75 நாடுகளுக்கு செக்.. பாகிஸ்தானையும் விடாத அமெரிக்கா!

அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை காலவரையற்ற முறையில் நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Prakash J

அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை காலவரையற்ற முறையில் நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் அதிபராக மீண்டும் பதவியேற்ற ட்ரம்ப், குடியேற்றக் கொள்கை மற்றும் விசா கட்டுப்பாடுகளில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு, ’கவலைக்குரிய நாடுகள்’ என்று வகைப்படுத்தப்பட்ட 19 நாடுகளைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பாளர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கிரீன் கார்டையும் விரிவான மதிப்பாய்வு செய்யுமாறு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

usa govt

அதன்பிறகு, தேசிய மற்றும் பொது பாதுகாப்பு, பலவீனமான சரிபார்ப்பு முறைகள், விசா காலாவதி ஆகியவற்றைக் காரணம் காட்டி, மேலும் ஏழு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைவுக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில், அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை காலவரையற்ற முறையில் நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த உத்தரவு 2026, ஜனவரி 21 முதல் அமலுக்கு வர இருக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளின் குடிமக்கள் தொடர்ந்து குடியேற்ற விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம், ஆனால் இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் வரை எந்த குடியேற்ற விசாக்களும் அங்கீகரிக்கப்படாது அல்லது வழங்கப்படாது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இடைநீக்கம் எப்போது நீக்கப்படலாம் என்பதற்கான எந்த காலக்கெடுவையும் அமெரிக்க அரசாங்கம் குறிப்பிடவில்லை. இது அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைவதற்கான வழிகளை மேலும் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், பால்கன் மற்றும் தெற்காசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களைப் பாதிக்கும். பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் குடியேற்ற விசா விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அமெரிக்க தூதரகங்களுக்கு தெரிவித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் விசா கட்டுப்பாடுகள் தொடர்பாக அமெரிக்கா எடுத்துள்ள மிகக் கடுமையான நடவடிக்கையாகவும் இது கருதப்படுகிறது. எனினும், இந்த மாற்றம் அமெரிக்காவிற்கு நிரந்தரமாக இடம்பெயர விரும்புவோருக்கு மட்டுமே பொருந்தும். இந்தத் தடையானது குடியேற்றம் அல்லாத, அதாவது தற்காலிக சுற்றுலா அல்லது வணிக விசாக்களுக்குப் பொருந்தாது. இந்தத் தடையின்கீழ் வரும் தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

usa

அந்த வகையில், ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, பஹாமாஸ், வங்கதேசம், பார்படாஸ், பெலாரூஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், மியான்மர், கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி'ஐவரி, கியூபா, காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, ஃபிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினி, ஹைதி, ஈரான், ஈராக், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மான்டனீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது.