ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், புதின் எக்ஸ் தளம்
உலகம்

முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்.. பின்வாங்கிய ஜெலன்ஸ்கி.. ட்ரம்ப் உற்சாகம்!

மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் இறுதிக்கட்டத்தை அடையும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Prakash J

மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் இறுதிக்கட்டத்தை அடையும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

புதின், ஜெலன்ஸ்கி, ட்ரம்ப்

இந்த நிலையில், ”உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஓர் ஒப்பந்தம் முன்னெப்போதையும்விட நெருக்கமாக உள்ளது” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நேட்டோ தலைவர்கள் உட்பட பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆரம்பத்தில் முன்வைத்த ஒரு முன்மொழிவின் அடிப்படையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகே அதிபர் ட்ரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். ”ஆனால், ரஷ்யாவிடம் உக்ரைன் எந்த பிராந்தியத்தையும் விட்டுக்கொடுக்காது” என அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தார். இந்த முடிவுக்கு ரஷ்ய தரப்பு எந்தப் பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

புதின், ஜெலன்ஸ்கி

இதற்கிடையே, ஒரே இரவில் ரஷ்யப் படைகள் உக்ரைனில் 153 ட்ரோன்களை ஏவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் 17 இலக்குகளை அடைந்ததாக தெரிவித்துள்ளனர். மறுபுறம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனின் 130 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.