ஈரான் போராட்டம் News on Air
உலகம்

ஒரு மாதத்தைக் கடந்த போராட்டம்.. ஈரானுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.

Prakash J

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.f

ஈரானிய நாணயமான ரியாலின் ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 16 லட்சமாக வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி, கடந்த டிசம்பர் 28 முதல் ஈரான் மக்களைப் போராட்டக் களத்திற்குத் தள்ளியது. பின்னர் அது ஆட்சி மாற்றத்தைக் கோரும் அரசியல் போராட்டமாகத் தீவிரமடைந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் ஈரானிய அரசு எடுத்துள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் 6,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்களை 'பயங்கரவாதிகள்' எனச் சாடியுள்ள அரசு, 42,300 பேரைக் கைது செய்துள்ளது. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

iran protest

'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' உள்ளிட்ட அமெரிக்கப் போர்க் கப்பல்கள் மத்திய கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் ராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” என்றும் நேர்மையான ஒப்பந்தத்திற்கு இதுவே கடைசி வாய்ப்பு எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலுக்குத் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்துள்ள சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் எச்சரித்துள்ளது.