அமெரிக்கா, மிகப்பெரிய போர் ஏற்பட்டால் 90 நாட்கள் வரை ராணுவத் தளங்கள் செயல்படுவதற்கான 'FORTRESS' திட்டத்தை உருவாக்கி வருகிறது. மின்சாரம், தண்ணீர், எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டாலும், தனித்த மின்சார அமைப்புகள் மூலம் ராணுவ நடவடிக்கைகளை தொடர்வதே இதன் நோக்கம்.
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்காவில் மிகப்பெரிய போர் ஏற்பட்டால், மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டாலும், தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பென்டகன் புதிய திட்டத்தைத் தயாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்கள் வெளியிலிருந்து எந்த உதவியும் பெறாமல் குறைந்தது 90 நாட்களுக்குச் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் இந்த முயற்சி, FORTRESS எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாகும். அமெரிக்க ராணுவம், பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாரம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டாலும் தனது செயல்பாடுகளைத் தொடர்வதே இதன் முக்கிய நோக்கமாகும். இது தொடர்பாக, தான் ஆய்வு செய்த ஆவணங்களின் அடிப்படையில் ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டல் செய்தி வெளியிட்டுள்ளது.
பெரிய அளவிலான போர் ஏற்பட்டால் அமெரிக்காவின் மின்சாரக் கட்டமைப்புகள், தண்ணீர் விநியோகம், எரிபொருள் கிடைப்பது மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் பாதிக்கப்படலாம். இதனால் ராணுவ நடவடிக்கைகளும் முடங்கும் அபாயம் உள்ளது.
இதனைத் தவிர்க்க, ராணுவத் தளங்களுக்குத் தேவையான மின்சாரம், தண்ணீர், எரிபொருள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளைத் தனித்த முறையில் உறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சாரக் கட்டமைப்புகளை மட்டுமே நம்பி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் தெரிவித்துள்ளார். மின்சாரம் என்பது தற்போது போரின் முக்கிய அங்கமாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த FORTRESS திட்டத்தில் எடுத்துச் செல்லக்கூடிய சிறிய அணுமின் உலைகள், பெரிய மின்கல சேமிப்பு அமைப்புகள் மற்றும் தனித்த மின்சாரக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுவான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் ராணுவத் தளங்கள் தொடர்ந்து இயங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் அல்லது அவசர காலத்தில், பொதுமக்களுக்குப் பொருட்களைத் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகளை, ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களைத் தயாரிக்கும் இடமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆயுதங்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய மாற்று விநியோக வழிகளையும் அவசரகால இருப்புகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் எட்டு மாதங்களை நெருங்கும் நேரத்தில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், 'ஃபோர்ட்ரஸ்' (FORTRESS) திட்டத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுவிட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.