டென்னஸ்ஸி மாகாணத்தில் 1962 ஆம் ஆண்டு பிறந்து அமெரிக்க கடற்படை விமானியாக வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் பட்ச் வில்மோர். தனது விமான திறமையாலும், விரைந்து முடிவு எடுக்கும் திறனாலும் பதவி உயர்வை குறைந்த ஆண்டுகளிலேயே பெற்று அமெரிக்க கடற்படை கேப்டனாக உயர்ந்தார்.
எட்டாயிரத்திற்கும் அதிகமான மணி நேரம் விமானத்தில் பறந்துள்ள பட்ச் வில்மோர், 663 முறை சிறப்பாக லேண்டிங் செய்ததன் மூலம் நாசாவின் கவனத்தை பெற்றார். அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படையில் 21 மிஷன்களை துரிதமாக செய்து காட்டியதன் மூலம், விண்ணிற்கு அனுப்ப சரியான நபர் என நாசா மூலம் அங்கீகரிக்கப்பட்டார்.
2000மாவது ஆண்டில் நாசா விண்வெளி வீரராக தேர்தெடுக்கப்பட்ட பட்ச் வில்மோர், 2 ஆண்டுகள் அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து வந்தார். முதலில் ராக்கெட் என்ஜின் குறித்த ஆய்வுகளில் பணியாற்றி, 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு பறந்தார். 11 நாள்கள் விண்வெளியில் 3 முறை ஸ்பேஸ்வாக் செய்து, மிகவும் கடினமான பணிகளை உடனிருந்த விண்வெளி வீரர்களுடன் இணைந்து செய்து பூமி திரும்பினார்.
மீண்டும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற பட்ச் வில்மோர், 167 நாள்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு மார்ச் 2015இல் பூமி திரும்பினார். அப்போது அவர் 4 முறை ஸ்பேஸ் வாக் செய்ய வேண்டியிருந்தது.
எனினும், வில்மோருக்கு திருப்பு முனையாக அமைந்தது கடந்த ஆண்டு ஜுன் 5 ஆம் தேதி மேற்கொண்ட விண்வெளி பயணம்தான். பூமிக்கு திரும்ப ஏற்பட்ட தாமதம், மற்ற விண்வெளி வீரர்கள் தாண்டி அவரை திரும்பப் பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.