trump & Scott Bessent reuters
உலகம்

ஈரானின் டார்கெட் லிஸ்டில் அமெரிக்க அமைச்சர்.. ராணுவத் தளத்தில் தஞ்சம்!

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தியதன் பின்னணியில் இந்த மிரட்டல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

கடந்த 2025 ஜனவரியில் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) அமெரிக்க நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் நிதி நெருக்கடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இவர் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல், ஈரானுக்கு எதிரான பொருளாதார அழுத்த நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் கடல் மற்றும் வான்வழித் தடைகளைத் தொடர்ந்து, தரைவழியாகவும் ஈரானுக்கு ஆதரவளிக்கும் அல்லது வர்த்தகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் (Secondary Sanctions) பாயும் என்று ஸ்காட் பெசென்ட் எச்சரித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ராணுவ ரீதியாக இந்தத் தரைவழித் தடைகளைக் கண்காணித்துச் செயல்படுத்த அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) ‘டாஸ்க் போர்ஸ் அயன் கேட்’ (Task Force Iron Gate) என்ற சிறப்புப் படையை அமைப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் தான், ஈரானிடமிருந்து ஸ்காட் பெசென்ட் க்கு உயிருக்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி ராணுவத் தளத்தில் தங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

US restricts Iranian land commerce

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், நவம்பர் 10-ம் தேதி வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், பெசென்ட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலின் தீவிரம் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், அமெரிக்க அதிகாரிகளைக் குறிவைத்து ஈரான் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாக எச்சரித்துள்ளார். அமெரிக்கக் குடிமக்களைக் கொலை செய்வதற்கான சில சதித்திட்டங்கள் மிகவும் முன்னேறிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் அடங்கிய ரகசியக் குறிப்பை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கடந்த மாதம் ஆய்வு செய்துள்ளது.

Scott Bessent

அதேநேரத்தில், அமெரிக்க மண்ணிலோ அல்லது வெளிநாடுகளிலோ பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தும் திறன் ஈரானுக்கு குறைவாகவே இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்க நிதியமைச்சருக்கே உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.