அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றது. எலான் மஸ்க் 446 மில்லியன் டாலர் செலவிட்டும், குடியரசுக் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் மஸ்க் ஆதரித்த வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மை பெற 218 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் ஜனநாயக கட்சி 242 இடங்களிலும், ட்ரம்பின் குடியரசுக் கட்சி 151 இடங்களிலும் வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், ட்ரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களில் பணத்தை வாரி இறைத்தார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எலான் மஸ்க் சுமார் 474 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4478 கோடி) செலவிட்டும், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. அவர் ஆதரித்த முக்கிய வேட்பாளர்கள் பலரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இதற்காக குடியரசுக் கட்சிக்கு ஆதரவான தேர்தல் அமைப்புகளுக்கு குறைந்தது 446 மில்லியன் டாலர்களை அவர் வழங்கியுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் அவர் செலவிட்ட சுமார் 290 மில்லியன் டாலர்களைவிட இது அதிகம்.
ஆனால், மஸ்க் அதிக பணம் செலவிட்ட ஐந்து முக்கிய செனட் தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, மஸ்க்கின் தொழில் நிறுவனங்கள் செயல்படும் டெக்சாஸ் மாகாணத்தில் குடியரசுக் கட்சி செனட் தேர்தலிலும் ஆளுநர் தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது.
டெக்சாஸில் குடியரசுக் கட்சியின் கென் பாக்ஸ்டனுக்கும் ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தலரிகோவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் மஸ்க் அதிக கவனம் செலுத்தினார். தலரிகோவுக்கு எதிரான விளம்பரங்களுக்கு மட்டும் 28 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிடப்பட்டது. இருப்பினும் தலரிகோ வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, டெக்சாஸின் புதிய ஜனநாயகக் கட்சி ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ள ஜினா ஹினோஜோசா, மஸ்க்கின் டேட்டா சென்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியினர், மஸ்க்கின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அரசு நிதி மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.