உலகம்

இடைத்தேர்தலில் வென்ற 5 பேர்! - பைடன் அரசின்கீழ் முக்கியத்துவம் பெறுகின்றனரா இந்தியர்கள்?

Abinaya

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைத்தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. ஆளும் ஜனநாயக கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

ஆளும் ஜனநாயக கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் அமி பெரா ஆகியோர் அடங்குவர். சில கடுமையான போட்டிகளில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளிகள் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள் என வாஷிங்கடன் போஸ்ட் நாளிதழும் பாராட்டி உள்ளது.

புதிய அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் கழித்துதான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் அமெரிக்காவில் நடைபெறும். அந்த வகையில் ஜோ பைடன் அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், தற்போது அமெரிக்க இடைக்கால தேர்தல் நடைபெற்றுள்ளது. அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறும்.

இந்த இடைத்தேர்தல் அமெரிக்காவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காரணம், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தான் 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் கணிப்புகள் கூறுகின்றன. 

துணை அதிபராக கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் நிதிமேலாண்மை துறையில் நீரா மற்றும் பொருளாதார கவுன்சிலில் பாரத் ராமமூர்த்தி, டிஜிட்டல் பிரிவின் தலைமை பிரிவில் கரிமா மற்றும் இதர அமைச்சகத்தில் 4 இந்தியர்கள் ஏற்கனவே தேர்வான நிலையில், தற்போது இடைத்தேர்தலிலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்திருப்பது பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.