உலகம்

"என்னைக் கடத்திட்டாங்க... கடத்திட்டாங்க" - அனுதாப வாக்குகளைப் பெற ஒரு போலி கடத்தல் நாடகம்

webteam

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் சபரினா பெல்ச்சர். கறுப்பினப் பெண்ணான அவர், அங்குள்ள சம்ப்டர் நகர மேயருக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். மக்களின் அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காக தன்னை யாரோ கடத்திவிட்டதாக போலி வீடியோவை வெளியிட்டு வசமாக சிக்கியுள்ளார்.

29 வயதான சபரினா மீது காவல்துறையினர், போலி கடத்தலை அரங்கேற்றியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்தக் கடத்தல் நாடகத்தை அப்படியே ஃபேஸ்புக் லைவ்வில் ஓடவிட்டிருக்கிறார். அந்த போலியான காட்சிகளை எடுப்பதற்கு கிறிஸ்டோபர் எட்டி என்ற இளைஞர் உதவி செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

தன்னிடம் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றதாகவும், அப்போது கார் கதவுகளை உடைத்து தன்னைக் கடத்தியதாகவும் காவல்துறையில் சபரினா புகார் செய்திருந்தார். அந்த மனிதரை தனக்குத் தெரியாது என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவரைத் தாக்கியதாகக் கூறப்பட்ட நபரான எட்டியிடம் விசாரணை நடத்தியதில் , அவர் சபரினாவுக்கு முன்பே அறிமுகமானவர் என்று தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்பு இருவரும் அந்த போலி வீடியோவை தயாரித்துள்ளனர். இது தனிப்பட்ட லாபத்திற்காக சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் முயற்சி என்று சபரிவானாவை காவல்துறையினர் கண்டித்துள்ளனர். சம்ப்டர் நகர மேயர் பதவிக்கு போட்டியிடும் ஆறு பேரில் சபரினாவும் ஒருவர். தற்போதைய மேயர் ஜோ மெக்ல்வீன், மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.