உலகம்

பேண்ட்டில் கடத்தப்பட்ட 60 பாம்புகள், பல்லிகள் - அமெரிக்க நபர் சிக்கியது எப்படி?

Sinekadhara

உலகெங்கிலும் விமான நிலையங்களில் நகை, பணம் மற்றும் போதைப்பொருட்களை கடத்துவோர் பிடிபடுவதுண்டு. அரிதாக சில நேரங்களில் அரியவகை உயிரினங்களை கடத்துவோர் கைதுசெய்யப்படுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஒரு நபர் செய்த செயல் சுங்கத்துறை அதிகாரிகளையே பயமுறுத்தியுள்ளது.

தெற்கு கலிஃபோரினாவைச் சேர்ந்தவர் ஜோஸ் மானுவேல் பேரெஸ். இவர் கடந்த 6 வருடங்களாக விலங்குகள் மற்றும் உயிரினங்களை நாடுவிட்டு நாடு கடத்தும் கடத்தல் பணியை திறம்பட செய்து வந்துள்ளார். அப்படி இதுவரை 1,700க்கும் மேற்பட்ட விலங்குகளை ஹாங்காங் மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு கடத்திவந்துள்ள திறமையான கடத்தல்காரரான இவர் கடந்த மார்ச் மாதம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.

மெக்சிகோவிலிருந்து ஒன்றல்ல, இரண்டல்ல... ஒரே நேரத்தில் 60 விலங்குகளை கடத்திக்கொண்டுவர முயன்றபோது சோதனையில் பிடிபட்டார். அதுவும் அவர் உயிரினங்களை மறைத்து வைத்திருந்தது அவருடைய இடுப்பு மற்றும் கால்சட்டையில். அதிகாரிகளிடம் பிடிபட்டதும் அவர் தனது செல்லப்பிராணிகளான பல்லிகளைத்தான் தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டுவந்ததாகக் கூறியிருக்கிறார். ஆனால் பரிசோதனை செய்துபார்த்தபோது அதிகாரிகளே ஷாக் ஆகியுள்ளனர். ஏனென்றால் அவர் பாக்கெட்டில் மரக்கட்டை முதலை பல்லிகள், Isthmian dwarf boas என்று சொல்லக்கூடிய நிறம் மாறும் பாம்புகள் இருந்தன. இந்த பாம்புகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கண்களிலிருந்து ரத்தம் வழியவைக்கும் யுக்திகளை பயன்படுத்துகின்றன. அதில் மூன்று பிராணிகள் இறந்துவிட்டன.

அதனையடுத்து அதிகாரிகள் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பெரெஸ் சட்டவிரோதமாக தனது சில சரக்குகளை கொண்டு செல்ல நீதித்துறையுடனான ஒரு மனு ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், அதன்படி கழுதைகளுக்கு பணம் கொடுத்ததாகவும், மற்ற நேரங்களில் தானே உயிரினங்களை எடுத்துக்கொண்டு நாட்டின் எல்லைகளை கடந்துசென்றதையும் ஒப்புக்கொண்டார். அப்படித்தான் இதுவரை 1700க்கும் மேற்பட்ட உயிரினங்களை அமெரிக்காவிற்கு கடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

யுகடன் பாக்ஸ் ஆமைகள், மெக்சிகன் பெட்டி ஆமைகள், குட்டி முதலைகள் மற்றும் மெக்சிகன் மணிகள் கொண்ட பல்லிகள் உட்பட அவர் வலையில் சிக்கிய விலங்குகளை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 739,000 டாலருக்கு விற்பனை செய்துள்ளதற்கான ஆவணங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரேஸ் தானே இரண்டு கடத்தல்களை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஒரு கடத்தலுக்கு 20 ஆண்டுகள் என்ற கணக்கில் அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வனவிலங்கு கடத்தல்களில் ஈடுபடும் ஒருவருக்கு அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.