ஏப்ரல் 1 முதல் ஈரானிடம் அமெரிக்கா 24 MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்களை இழந்துள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட இழப்பு சுமார் 720 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, அடுத்த பேச்சுவார்த்தை ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் 40 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான விஷயங்கள் கசிந்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா விமானங்கள் ஈரானால் தாக்கப்பட்ட சுவாரஸ்ய செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆளில்லா விமானத்தை அமெரிக்கா இழந்தது குறித்து புதிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. போரின்போது, அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் நடைபெற்ற ஒரு நடவடிக்கையின்போது MQ-4C என்ற ஆளில்லா விமானம் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
பின்னர் இது, விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானே அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்கிற யூகங்களும் உள்ளன. இதுகுறித்த செய்திகளும் வெளியாகி இருந்தன. இதற்கிடையே, இந்த விமானம் தொடர்பாக சுவாரஸ்யமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த ஆளில்லா விமானத்தின் விலை சுமார் 200-240 மில்லியன் டாலர்கள் ஆகும். இது, இரண்டு லாக்ஹீட் மார்ட்டின் F-35 போர் விமானங்களின் விலையைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், அமெரிக்கா இந்தப் போரில் ஏப்ரல் 1 முதல் இதுவரை தனது 24 MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்களை இழந்துள்ளதாக சிபிஎஸ் நியூஸை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இழப்புகளின் மதிப்பு சுமார் 720 மில்லியன் டாலர்கள் என அது தெரிவித்துள்ளது.