Iran bridge x page
உலகம்

’இன்னும் கெடுவே முடியல..’ அதுக்குள்ள ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா.. ஈரானின் பாலங்கள் தகர்ப்பு!

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையே ஒரு மாதமாக நடைபெற்றுவரும் போர் அடுத்தகட்டத்தை எட்டவுள்ளது.

Prakash J

இன்னும் ட்ரம்ப் கொடுத்த காலக்கெடுவே முடியாத நிலையில், இன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் பல நகரங்கள் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளன.

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையே ஒரு மாதமாக நடைபெற்றுவரும் போர் அடுத்தகட்டத்தை எட்டவுள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால் அந்நாட்டின் அணு உலைகளும் பாலங்களும் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார். அந்தக் கெடு முடிய இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இதற்கிடையே, அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும், அது மீண்டும் ஒருபோதும் மீட்கப்பட முடியாது" என இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும், அவரது கருத்துக்கு ஈரான் சற்றும் பின்வாங்காது, அதை எதிர்கொள்ளும் விதத்திலும், அதற்கான ஆயத்தங்களுடன் இருப்பதாகவே வல்லுநர்கள் கருதுகின்றனர். இது ஒருபுறமிக்க.. மறுபுறம் இன்னும் ட்ரம்ப் கொடுத்த காலக்கெடுவே முடியாத நிலையில், இன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் பல நகரங்கள் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளன.

ஈரானின் காஷானில் உள்ள ஒரு ரயில்வே பாலம், மஷ்ஹத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம் மற்றும் தப்ரிஸ்-தெஹ்ரான் நெடுஞ்சாலையில் தப்ரிஸ் அருகே உள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலம் உட்பட, நாடு முழுவதும் உள்ள பல போக்குவரத்து உள்கட்டமைப்பு தளங்கள் உள்ளிட்டவை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தகர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் (IRGC) ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், ஈரான் முழுவதும் உள்ள சுமார் 10 முக்கிய ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது என 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தி வெளியிட்டுள்ளது. தவிர, ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் இன்று கூடுதல் தாக்குதல்களை நடத்தியுள்ளது. நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான அத்தீவில், 50-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கா தாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு கட்டடம் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.