Deportation - file photo  Reuters
உலகம்

அமெரிக்காவுக்கே ஆட்டம் காட்டிய பாகிஸ்தான்.. ஆதங்கத்தில் ட்ரம்ப்.. ஈரான்தான் காரணமா?

2025 செப்டம்பர் முதல் 2026 ஜனவரி வரை அமெரிக்கா மூன்று முறை ஈரானுக்கு நாடு கடத்தல் விமானங்களை இயக்கி, 100-க்கும் மேற்பட்ட ஈரானியர்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய ஈரானியர்களை நாடு கடத்தும் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டுள்ளது. நாடு கடத்தப்பட்ட ஈரானியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் விமானத்தை அனுமதிக்க பாகிஸ்தான் மறுத்ததாகவும், இதனால் அந்த விமானம் பாதியிலேயே மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள மேசா (Mesa) பகுதியில் இருந்து நேற்று புறப்பட்ட இந்தச் சிறப்பு விமானத்தில் குறைந்தது 9 ஈரானியர்கள் இருந்துள்ளனர். இவர்களை முதலில் பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஈரானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

file photo

ஆனால், விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களிலேயே தனது பாதையை மாற்றி, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளது. பாகிஸ்தான் அனுமதி மறுத்ததே இதற்குக் காரணம் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் மீண்டும் அரிசோனாவை வந்தடைந்ததும், அதிலிருந்த ஈரானியர்கள் கீழே இறக்கப்பட்டு, மீண்டும் குடியேற்றத் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவுக்கு நேரடி தூதரக உறவுகள் இல்லை. இதனால், இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களை நேரடியாக நாடு கடத்துவதில் அமெரிக்காவுக்குச் சிக்கல் உள்ளது. இதற்குத் தீர்வாக, பாகிஸ்தானை இடைநிலை நாடாகப் பயன்படுத்தி, அங்கிருந்து ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு குடியேறிகளை அனுப்ப ட்ரம்ப் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.

Deportation - file photo

இதுதொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஈரானியர்களை ஏற்றிச் சென்ற விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்திருப்பது அமெரிக்காவின் திட்டத்திற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஞாயிற்றுக்கிழமையும் அரிசோனாவில் இருந்து குறைந்தது 8 ஈரானியர்களை ஏற்றிச் செல்ல மற்றொரு விமானம் தயாராக இருந்தது. ஜார்ஜியா வழியாகப் பாகிஸ்தானுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்த அந்தப் பயணமும் பின்னர் கைவிடப்பட்டது.

Deportation - file photo

இதற்கிடையே, ஈரானியர்களை நாடு கடத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் குடியேற்ற வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் சிலர் துன்புறுத்தலுக்கும், தண்டனைக்கும் ஆளாகலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

2025 செப்டம்பர் முதல் 2026 ஜனவரி வரை அமெரிக்கா மூன்று முறை ஈரானுக்கு நாடு கடத்தல் விமானங்களை இயக்கி, 100-க்கும் மேற்பட்ட ஈரானியர்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.