அமெரிக்காவின் CIA மற்றும் இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறைகள், ஈரானின் புதிய உச்சத் தலைவரான மொஜ்தபா காமேனியை கண்டுபிடிக்க உயர்மட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஜ்தபா காமேனியின் தந்தை அயத்துல்லா அலி காமேனி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததார். அதனைத் தொடர்ந்து, 56 வயதான மொஜ்தபா காமேனி கடந்த மார்ச் 8-ஆம் தேதி உச்சத் தலைவராக பொறுப்பேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பதவியேற்று கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியும் அவர் பொதுமக்கள் முன் தோன்றவில்லை. தொலைக்காட்சி உரையோ, பொது நிகழ்ச்சிகளிலோ பங்கேற்காததுடன், தகவல் தொடர்பையும் முற்றிலுமாகத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது இருப்பிடம் மற்றும் அதிகார செயல்பாடு குறித்து வெளிநாட்டு உளவுத்துறைகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
'தி டைம்ஸ்' வெளியிட்ட தகவலின்படி, கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளும், டிஜிட்டல் தொடர்புகளை முழுமையாகத் தவிர்ப்பதும் அவரைக் கண்டறிவதை சிக்கலாக்கியுள்ளது. 'கடந்த ஐந்து மாதங்களாக தொலைபேசி, மடிக்கணினி அல்லது எந்த டிஜிட்டல் தடயமும் இல்லை' என்று மேற்கத்திய உளவுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
முன்னாள் உச்சத் தலைவரைப் போல இல்லாமல், மொஜ்தபா மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தாமல், ஈரான் புரட்சிகர காவல்படையான IRGC நம்பிக்கைக்குரிய தூதர்கள் மூலம் கையெழுத்துச் செய்திகள் மட்டுமே பரிமாறுவதாக கூறப்படுகிறது.
அவர் தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பான நிலத்தடி மையம் அல்லது கோம் நகரைச் சுற்றியுள்ள சுரங்க வலையமைப்பில் தங்கியிருக்கலாம் என உளவுத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மொஜ்தபா காமேனியின் இருப்பிடத்தை மறைக்க, ஈரான் போலி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் திசைமாற்றும் உத்திகளைப் பயன்படுத்தலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் ராணுவ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முடிவுகளில் IRGC-யின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் முக்கிய முடிவுகளை உண்மையில் யார் வழிநடத்துகின்றனர் என்ற கேள்வி வாஷிங்டன் மற்றும் டெல் அவிவில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.