செய்தியாளர்: வெற்றிச்செல்வி
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மீண்டும் தலைதூக்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாகப் பணவீக்க அழுத்தம் நீடிப்பதால், அந்நாட்டு மக்களின் அன்றாடச் செலவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வு மீண்டும் பொருளாதார நிபுணர்களின் கணிப்பைத் தாண்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாகப் பணவீக்க அழுத்தம் நீடிப்பது அந்நாட்டு மக்களிடமும் நிதிச் சந்தைகளிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி வெளியான அக்டோபர் மாதப் பணவீக்கத் தரவுகள், அமெரிக்காவின் விலைவாசி உயர்வு இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதை உணர்த்தியுள்ளன.
அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீடான CPI, அக்டோபர் மாதத்தில் 0.4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், பொருளாதார நிபுணர்கள் 0.3 சதவீத உயர்வையே எதிர்பார்த்திருந்தனர். கணிப்புகளை மிஞ்சிய இந்த உயர்வு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு மீண்டும் சவாலாக மாறியுள்ளது.
அமெரிக்க மக்களின் அன்றாடச் செலவுகளுக்குப் பெரும் சுமை கொடுக்கும் வகையில் உணவு, எரிபொருள், வீட்டு வாடகை என அத்தியாவசியச் செலவுகள் அடுத்தடுத்து உயர்ந்துள்ளன. அக்டோபர் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை ஒட்டுமொத்தமாக 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இறைச்சி, கோழி, முட்டை, பால், மீன், பழங்கள் என அன்றாடத் தேவைக்கான பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டுள்ளன. அதேபோல், வீட்டு வாடகை மற்றும் தங்குமிடச் செலவுகள் 0.3 சதவீதம் உயர்ந்துள்ளன. அமெரிக்காவின் ஒட்டுமொத்த மாதாந்திரப் பணவீக்க உயர்வில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை இந்த வீட்டு வசதிச் செலவுகளே ஆக்கிரமிப்பு செய்துள்ளன.
இன்னொரு பக்கம், பெட்ரோல் விலை 1 சதவீதமும், டீசல் விலை 2.7 சதவீதமும் உயர்ந்துள்ளது. மின்சாரக் கட்டணமும் 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஈரான் போர் தொடர்பான பதற்றத்தால் சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் எரிபொருள் செலவுகளைப் பாதித்துள்ளன. அதேபோல், அமெரிக்க அரசு விதித்துள்ள இறக்குமதி வரிகளால் வெளிநாடுகளிலிருந்து வரும் சில பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்வதும், அமெரிக்க மக்களின் செலவுகள் தொடர்ந்து அதிகமாக இருப்பதும் பணவீக்க அழுத்தத்துக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணவீக்க உயர்வுக்கு மத்தியில், அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்தகட்ட முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிசம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை மேலும் 0.25 சதவீதப் புள்ளிகள் உயர்த்தலாம் என நிதிச் சந்தைகள் எதிர்பார்க்கின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்த ஃபெடரல் ரிசர்வ் எடுக்கப்போகும் இந்த முடிவு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் உலக நிதிச் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.