செய்தியாளர்: எம்.மீரா
ஈரானின் ஆட்சிக்கு செல்லும் நிதி ஆதாரங்களை முடக்கும் நோக்கத்துடன், அமெரிக்கா ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ (Operation Economic Outcast) என்ற புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன்கீழ், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 4 இந்திய நிறுவனங்கள் மற்றும் 3 இந்தியர்கள் மீது அமெரிக்க வெளியுறவுத்துறை கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
தடைக்குள்ளான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.. சுங்கத் தரகராகச் (customs broker) செயல்பட்டு, ஈரானிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய உதவியதற்காக Portease Partners LLP என்ற இந்திய நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் நியமிக்கப்பட்ட முதலீட்டாளர்களான ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி (Harish Ramchandra Rangi) மற்றும் இத்ரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக் (Indrismiya Ashrafmiya Shekh) ஆகியோர் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சுமார் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாக Sadashiva Overseas Ltd என்ற இந்திய நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததற்காக PP Softtech Pvt Ltd என்ற இந்திய நிறுவனம் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த பிரஷாந்த் கார்க் (Prashant Garg) என்பவரும் தனிப்பட்ட முறையில் தடை செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாக Prakrutees Infra Impex India Pvt Ltd நிறுவனத்தை பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் சேர்த்திருக்கிறது அமெரிக்கா.
ஈரானிய பெட்ரோலிய வேதிப் பொருட்களை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் கொண்டு செல்லுதல் தொடர்பான முக்கியப் பரிவர்த்தனைகளில் தெரிந்தே ஈடுபட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சகம் ஒரே நேரத்தில் தடை விதித்த 60 நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களின் பட்டியலில் இவர்களும் அடங்குவர்.
ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் முயற்சியாக, அந்நாட்டுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் தண்டிக்கப்படும் என்று அமெரிக்கா இந்த வாரத் தொடக்கத்தில் எச்சரித்திருந்தது; இருப்பினும், உடனடியாகத் தடைகள் ஏதும் விதிக்கப்படாது என்றும் அது கூறியிருந்தது.