உலகம்

மியன்மர் இனப்படுகொலை..! - அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம்

webteam

மியான்மரில் ரோஹிங்ய இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் இனப்படுகொலை என கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஆதரவாக 324 எம்.பி.,க்களும், எதிராக ஒரேயொரு எம்.பி.யும் வாக்களித்தனர். வெளியுறவு விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் சபையின் குழுத் தலைவர் எட் ராய்ஸ், ரோஹிங்ய மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களை இனப்படுகொலையாகவே அமெரிக்கா பாவிக்கிறது என தெரிவித்தார். 

இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். இந்த தீர்மானம் மூலம், பிரதிநிதிகள் சபை தனது கடமையை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது என கூறினார். தீர‌மானத்தை தொடர்ந்து, மியான்மர் அரசுக்கு கூடுதல் நெருக்கடியை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மியான்மர் அரசு பொய் வழக்கு தொடர்ந்து கைது செய்து வைத்திருக்கும் ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் ‌வா லோன் மற்றும் கியாவ் சோவை விடுதலை செய்ய வ‌லியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.