Russian Crude Oil web
உலகம்

1,400 கோடி ரூபாய் வருவாய்.. ரஷ்ய எண்ணெய்க்கு திடீரென அதிகரித்த கிராக்கி!

வளைகுடா போரினால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை தொடர்ந்து கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷ்ய எண்ணெய்யை வாங்குமாறு சிபாரிசு செய்திருக்கிறது அமெரிக்கா.

PT WEB

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் எதிர்ப்பு போரால் ரஷ்யா அதிக நன்மை அடைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை பிரச்சினையால் ரஷ்ய எண்ணெய்க்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா தினசரி 150 மில்லியன் டாலர் வருவாய் பெறுகிறது. இந்த வருவாயை உக்ரைனுக்கு எதிரான போருக்கு பயன்படுத்துவதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் கூறுகிறது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போர், 2 வாரமாகிவிட்ட போதிலும் ஓயவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் பல லட்சம் கோடி ரூபாய் செலவு ஆவது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த போருக்கு தொடர்பே இல்லாத இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த போரால் உலகிலேயே பலன் அடைந்த ஒரே நாடாக ரஷ்யா விளங்குகிறது.

Putin & Trump

ஹோர்முஸ் நீரிணை பிரச்சினையால் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தேவை அதிகரித்து அதன் விற்பனை அதிகரித்ததே இதற்கு காரணம். உலக கச்சா எண்ணெய் நெருக்கடியால் ரஷ்யாவுக்கு தினசரி 150 மில்லியன் டாலர்கள், அதாவது ஆயிரத்து 400 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக புகழ்பெற்ற ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழ் கூறியுள்ளது.

இப்பணத்தை கொண்டு உக்ரைனுக்கு எதிரான தங்கள் போருக்கான நிதியாதாரத்தை புடின் வலுப்படுத்திக்கொள்வதாகவும் அந்த இதழ் கூறியுள்ளது. முன்பு இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் விற்ற ரஷ்யா தற்போது சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.