ட்ரம்ப் - மொஜ்தபா காமேனி Pt web
உலகம்

இயக்குவது யார்? மொஜ்தபா எங்கு இருக்கிறார்? தீவிரமாய்த் தேடும் அமெரிக்கா.. விலகாத ஈரான் மர்மம்!

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து ஏவுகணைகளால் ஈரானைத் துளைத்து வரும் நிலையில், சற்றும் அதற்குத் தயங்காது தன்னால் முடிந்த அளவுக்கு அவ்விரண்டு நாடுகளையும் சார்ந்த பகுதிகளை ஈரான் அழித்து வருகிறது.

Prakash J

'அந்த நாட்டை இயக்குவது யார்? உண்மையில் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா?' என அடுக்கடுக்கான கேள்விகளால் அமெரிக்காவும் இஸ்ரேலும் திளைத்துப் போய் நிற்கின்றன. தவிர, அவரைப் பற்றிய தேடுதல் வேட்டையையும் தொடங்கியுள்ளன.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர், நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. இருதரப்பும் மாறிமாறித் தாக்கி வருவதால், அதற்கு இப்போது முடிவு கிடைக்காது என்றே பலரும் நம்புகின்றனர். அத்துடன் அதற்கான அறிகுறிகளும் எதுவும் தென்படவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து ஏவுகணைகளால் ஈரானைத் துளைத்து வரும் நிலையில், சற்றும் அதற்குத் தயங்காது தன்னால் முடிந்த அளவுக்கு அவ்விரண்டு நாடுகளையும் சார்ந்த பகுதிகளை ஈரான் அழித்து வருகிறது. ‘ஈரானை முற்றிலுமாக அழித்துவிட்டோம்; அந்நாட்டிடம் ஆயுதங்கள் இல்லை; வழிநடத்தவும் தலைவர்கள் இல்லை’ என அமெரிக்காவும், இஸ்ரேலும் அடிக்கடி கூவி வரும் நிலையில், அந்த நாடுகளுக்கே சவால் விடும் வகையில் அவ்வப்போது ஆயுதங்களை அனுப்பி, ஆட்டம் காண்பிக்கும் ஈரானைக் கண்டு உலக நாடுகளே வியந்துபோய்தான் நிற்கின்றன.

ட்ரம்ப், நெதன்யாகு

இந்த நிலையில், 'அந்த நாட்டை இயக்குவது யார்? உண்மையில் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா?' என அடுக்கடுக்கான கேள்விகளால் அமெரிக்காவும் இஸ்ரேலும் திளைத்துப் போய் நிற்கின்றன. தவிர, அவரைப் பற்றிய தேடுதல் வேட்டையையும் தொடங்கியுள்ளன.

அலி கமேனி மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமெனி உச்சபட்ச தலைவர் பதவியை ஏற்றதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றாததும், அவர் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அறிக்கை வாசிக்கப்பட்டதும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. காரணம், அலி கமேனி இறந்த அன்றே, இவரும் தாக்கப்பட்டதாகவும், கடுமையான காயம் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்குப் பிறகு அங்கு என்ன நடக்கிறது என்பதும், மொஜ்தபா எங்கே இருக்கிறார், என்ன நிலையில் இருக்கிறார் என்பதிலுமே இன்னும் மர்மம் விலகாமல் உள்ளது. இந்த நிலையில்தான் அமெரிக்கா, இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஜ்தபா காமேனி

அதன்படி, ‘மொஜ்தபா உயிருடன் இருக்கிறார், ஆனால் அவர் தனது நாட்டின் மீது உண்மையான கட்டுப்பாட்டில் இல்லை. மொஜ்தபாவால் அரசியல் அமைப்பின் மீது தனது அதிகாரத்தை முழுமையாகச் செலுத்த முடியாத நிலையில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை திறம்பட அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடும்’ எனத் தெரிவிக்கின்றன. மேலும், ’அலி கமேனியைக் கொன்ற வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா காயமடைந்த போதிலும், அவர் குறைந்தபட்சம் சில பணிகளையாவது உடல்ரீதியாகச் செய்யும் திறனுடன் இருக்கிறார்’ என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போதைய பாதுகாப்புச் சூழல் காரணமாக புதிய உச்ச தலைவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதாகவும், அவரது காயத்தின் தீவிரத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அவர் வெளியில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், தெஹ்ரானில் யார் பொறுப்பில் இருக்கிறார் என்பதை அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் குழு இன்னும் மதிப்பீடு செய்து வருவதாகவும் அவைகள் தெரிவித்துள்ளன.